குறித்த நேரத்திற்கு செல்வதில்லை; நொண்டிக் குதிரையாய் மாறிய தாம்பரம் அதிவேக ரயில்: பயணிகள் அதிருப்தி

நெல்லை: தாம்பரத்தில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு கடந்த மாதம் தொடங்கப்பட்ட அதிவேக ரயில் நொண்டி குதிரையாய் பல இடங்களில் ஆமை வேகத்தில் செல்வதால் பயணிகள் நொந்து நூலாகின்றனர்.
செங்கோட்டை – தாம்பரம் புதிய வாராந்திர அதிவேக ரயில் சேவையை கடந்த மாதம் பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி வைத்தார்.

இந்த ரயில் (எண்.20684) கடந்த மாதம் 17ம் தேதி முதல் செங்கோட்டையில் இருந்து முதல் சேவையை தொடங்கியது. செங்கோட்டையில் இருந்து மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னை தாம்பரத்திற்கு மறுநாள் காலை 6:05 மணிக்கு செல்கிறது.

நெல்லை – தென்காசி வழித்தட மக்களும், அதேபோன்று அருப்புக்கோட்டை – காரைக்குடி – திருவாரூர் மக்களும் இந்த ரயில் இயக்கத்தால் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த ரயிலில் செங்கோட்டையிலிருந்து சாதாரண கட்டணமாக ரூ.240ம், தூங்கும் வசதி உள்ள முன்பதிவு பெட்டியில் 435 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

இந்த ரயில் பெயருக்குதான் அதிவேகம் என கூறப்படுகிறதே தவிர, பயண வேகம் பாசஞ்சரை விட மோசமாக உள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கடந்த மே 1ம் தேதி மாலை 4:15 மணிக்கு புறப்பட்ட இந்த அதிவேக ரயில், செங்கோட்டையிலிருந்து விருதுநகர் வரை சுமார் 110 கிலோமீட்டர் வேகத்தில் சென்றது. ஆனால் அதன் பின்னர் இதன் வேகம் குறைக்கப்பட்டது. அதாவது காலை 6 மணிக்கு தாம்பரம் செல்ல வேண்டிய ரயில் காலை 7:30 மணிக்கு தான் அங்கு சென்று சேர்ந்தது. இதனால் நெல்லை, தென்காசி பயணிகள் அதிக்குள்ளாயினர். சென்னை செல்ல 15 மணி நேரம் ஆனதால் புலம்பிக் கொண்டே சென்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் நெல்லையில் இருந்து இந்த ரயில் மாலை 6:10 க்கு புறப்பட்டுச் சென்றது. அதற்கு 17 நிமிடங்களுக்கு முன் அதாவது மாலை 5.53க்கு நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் (வண்டி எண் 22658) புறப்பட்டு, அதிகாலை 4 மணிக்கு தாம்பரம் சென்றடைந்தது. ஆனால் செங்கோட்டை- தாம்பரம் அதிவேக ரயிலோ வெகு காலதாமதமாக செல்வதால் பயணிகள் இதில் பயணிக்க தயக்கம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி கடையம் அந்தோணி கூறுகையில், ‘‘செங்கோட்டையில் இருந்து பந்தய குதிரையாய் புறப்படும் இந்த ரயிலானது, பாதி தூரம் சென்றதும் நொண்டி குதிரையாய் மாறி விடுகிறது.

இந்த ரயிலை கால அட்டவணைப்படி காலை 6 மணிக்கு தாம்பரம் செல்லும் வகையில் இயக்கிட வேண்டும். மேலும் இந்த ரயில் முக்கிய ரயில் நிறுத்தங்களான கீழ கடையம், மானாமதுரை, அதிராமபட்டினம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்வது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது வாராந்திர ரயிலாக இயக்கப்படும் இந்த ரயில், வரும் ஜூன் மாதம் முதல் வாரம் மும்முறை இயக்கப்பட உள்ளது. அவ்வாறு இயக்கப்படும் போது ரயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். இந்த ரயிலுக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.’’ என்றார்.

The post குறித்த நேரத்திற்கு செல்வதில்லை; நொண்டிக் குதிரையாய் மாறிய தாம்பரம் அதிவேக ரயில்: பயணிகள் அதிருப்தி appeared first on Dinakaran.

Related Stories: