யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை

கொடைக்கானல்: வனப்பகுதியில் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளதால், கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல மீண்டும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் யானை கூட்டம் அவ்வப்போது முகாமிட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை இந்தப் பகுதியில் யானை கூட்டம் நுழைந்தது. இப்பகுதிக்குள் இருந்த சவுக்கு மரம் மற்றும் யூகலிப்டஸ் மரங்கள் அகற்றப்பட்டு சோலை மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது.

இதனால் இந்த பகுதியில் புற்கள் தளைத்து யானைகளுக்கு தேவையான உணவு கிடைத்து வருகிறது. இதனால், கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் யானைகள் முகாமிட்டு உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். யானை கூட்டம் இந்த பகுதியை விட்டு அகன்ற பின்னர் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், யானைகள் எந்த பகுதி வழியாக உள்ளே நுழைகிறது? இதனுடைய நடமாட்டம் எவ்வாறு உள்ளது என்றும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். யானைகளின் நடமாட்டம் குறித்து தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் இப்பகுதி திறந்து விடப்பட்டது. தற்போது மீண்டும் மூடப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

The post யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை appeared first on Dinakaran.

Related Stories: