இருபுறமும் அடர்ந்து வளர்ந்து இடையூறு பாம்பன் குந்துகால் சாலையில் பயமுறுத்தும் கருவேல மரங்கள்: உடனே அகற்ற வாகனஓட்டிகள் கோரிக்கை

ராமேஸ்வரம்: பாம்பன் குந்துகால் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் குந்துகால் கடற்கரையில் சுவாமி விவேகானந்தர் மணிமண்டபம் அமைத்துள்ளது. அக்காள்மடம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த மணிமண்டபம் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

இந்த பகுதிக்கு செல்லும் நகர்புற சாலையின் இருபுறமும் சீமைகருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. குந்துகால் துறைமுகம், குழந்தை இயேசு நகர், முகம்மதியபுரம், தரவை தோப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் உள்ளூர் மக்கள் தினசரி இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். மேலும் விவேகானந்தர் மணிமண்டபம் மற்றும் குருசடை தீவு வனத்துறை படகு சவாரிக்கு செல்லும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் இச்சாலை வழியாகத்தான் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இச்சாலையை மறைத்து வளர்ந்துள்ள கருவேல மரங்களால் இரு வழிச் சாலை ஒரு வழிச்சாலையாக மாறியுள்ளது. இதனால் இச்சாலையில் செல்லும் அரசு பஸ்கள் பல இடங்களில் கருவேல மரங்களை உரசியபடி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் குந்துகால் செல்லும் சுற்றுலா மற்றும் உள்ளூர் வாகனஓட்டிகள் வளைவுகளில் செல்லும் போது மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்பவர்கள் கருவேல மரங்களில் சிக்கி முள்கீரல் ஏற்படுவதால் எச்சரிக்கையுடன் இந்த சாலையில் பயணிக்க வேண்டிய அச்ச நிலையும் உள்ளது. மேலும் வாகனங்கள் எதிரெதிரே வரும் போது கடந்து செல்வதில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அக்காள்மடத்தில் இருந்து குந்துகால் செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்களை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா மற்றும் உள்ளூர் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இருபுறமும் அடர்ந்து வளர்ந்து இடையூறு பாம்பன் குந்துகால் சாலையில் பயமுறுத்தும் கருவேல மரங்கள்: உடனே அகற்ற வாகனஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: