சன்ரைசர்ஸ் அணிக்கு 172 ரன் இலக்கு

ஐதராபாத்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஐபிஎல் டி20 தொடரின் லீக் போட்டியில் 47வது ஆட்டம் நேற்று இரவு ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. கொல்கத்தா அணி டாஸில் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ேஜசன் ராய், குர்பாஷ் ஆகியோர் களம் இறங்கினர். 2வது ஓவரின் முதல் பந்தில் குர்பாஷ் ரன் ஏதும் எடுக்காமல் எம். ஜான்சன் பந்துவீச்சில் புரூக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

பின்னர் ஜேசன் ராயுடன் வெங்கடேஷ் ஐயர் ஜோடி சேர்ந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் 7 ரன்கள் (4 பந்துகள்) எடுத்த நிலையில் வெங்கடேஷ் ஐயர் அவுட் ஆனார். தொடர்ந்து ஜேசன் ராயுடன் நிதிஷ் ரானா இணைந்தார். தியாகி பந்து வீச்சில் 20 ரன்னில் (19 பந்துகள்) அகர்வாலிடம் ஜேசன் ராய் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் ரானாவுடன் ரிங்கு சிங்க இணை சேர்ந்தார். 4.4 ஓவரில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ஜோடி சேர்ந்த ரானாவும், ரிங்குசிங்கும் சேர்ந்து 61 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரானா 42 ரன்களில் (31 பந்துகள்) அவுட் ஆனார்.

தொடர்ந்து ரிங்கு சிங்கும், ரசலும் ஜோடி சேர்ந்தனர். பவுண்டரி, சிக்சருமாக மிரட்டிய ரசல் 24 ரன்கள் (15 பந்துகள்) எடுத்து அவுட் ஆனார். மார்கண்டே வீசிய பந்தில் நடராஜனிடம் அவர் கேட்ச் ஆனார். ரிங்கு சிங்குடன் ஜோடி சேர்ந்த நரைன் 1 ரன்னில் (2 பந்துகள்) புவனேஸ்வர் பந்தில் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். நடராஜன் பந்தில் ஷர்துல் தாகூர் 8 ரன்னில் (6 பந்துகள்) அவுட் ஆனார். ரிங்குசிங் 46 ரன்னில் (35 பந்துகள்) சமத்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பிறகு வந்த ஹர்சித் ரானா ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். இறுதியில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்தொடங்கியது.

The post சன்ரைசர்ஸ் அணிக்கு 172 ரன் இலக்கு appeared first on Dinakaran.

Related Stories: