வெளிநாடுகளில் படிக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

‘‘வெளிநாடுகளில் படிப்பது, அங்கு வேலை பார்ப்பது என்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாகத்தான் இன்றைக்கும் பலர் எண்ணி வருகிறார்கள். படித்த படிப்பிற்கான தகுந்த வேலை மற்றும் சம்பளம் என்று அங்கு கிடைப்பதால்தான் பலர் அந்த வாழ்க்கையினை தேடி பறக்கிறார்கள். ஆனால் வெளிநாட்டில் படிப்பது மட்டுமில்லை அங்கு வேலை செய்யவும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதனைப் பற்றி பலருக்கு தெரிவதில்லை. பலர் அதனை செயல்படுத்துவது எளிதல்ல என்று நினைக்கிறார்கள்.

ஆனால் தகுந்த சான்றிதழ்கள் மற்றும் அவர்கள் நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டால்… எல்லோரும் வெளிநாடுகளில் படிக்க மட்டுமில்லாமல், வேலையும் பார்க்கலாம்’’ என்கிறார் ஸ்வர்ணலதா ஆனந்த். இவர் சென்னையில் ‘எலியாண்டர் எஜுகேஷன் சர்வீஸ்’ என்ற பெயரில் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்தி தருகிறார்.

‘‘நான் எம்.பி.ஏவில் இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றிருக்கேன். உளவியல் துறையிலும் பட்டப்படிப்பு படிச்சிருக்கேன். உளவியல் துறையில் உடன் படித்த என் நண்பர்களில் பலர் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் கவுன்சிலராக வேலை பார்த்து வருகிறார்கள். ஒரு முறை அவர்கள் என்னிடம் யதார்த்தமாக சொன்னார்கள், ‘உளவியல் படிச்சிருக்க, உன்னால் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் செய்து அனுப்பினால், நாங்க இங்க அவர்களுக்கு எங்களின் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக் கொள்ள முடியும்’ என்றனர். 15 வருடங்கள் இல்லத்தரசியாக இருந்த எனக்கு இது ஒரு நல்ல யோசனையாக இருந்தது.

என் கணவரின் ஐ.டி நிறுவனத்தில் நான் இணை நிறுவனர் பதவியில் இருந்தாலும், எனக்கான தனிப்பட்ட தொழில் மற்றும் அடையாளம் வேண்டும் என்று விரும்பினேன். அந்த சமயத்தில் என் நண்பர்கள் சொன்னதும், உடனடியாக என் நிறுவனத்தினை பதிவு செய்து அதற்கான வேலையில் ஈடுபட ஆரம்பித்தேன். பொதுவாக வெளிநாட்டில் கல்வி குறித்து பலருக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது. இதற்கென பல ஏஜென்சி நிறுவனங்கள் இயங்குகின்றன. ஆனால் அவர்கள் எல்லோரும் சரியாக செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.

சிலர் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு உரிய வசதிகளை செய்ய தவறிவிடுகிறார்கள். அதனால் நான் என் நிறுவனம் ஆரம்பிக்கும் போதே, இங்கிருந்து செல்லும் மாணவர்கள் அனைவரும் அவர்கள் படித்து முடிக்கும் வரை என்னுடைய கண்காணிப்பில் இருப்பார்கள். பிரச்னை ஏற்பட்டால் உடனே அவர்களுக்கான தேவையை செய்த தர அங்கு ஆட்கள் உள்ளனர். எனக்கு பணம் சம்பாதிப்பது முக்கியமில்லை. அதனால் நான் இதை ஒரு சர்வீசாகத்தான் செய்து வருகிறேன்’’ என்றவர் இதனை தனி ஒரு ஆளாக நிர்வகித்து வருகிறார்.

‘‘எனக்கு இந்த நிறுவனம் எவ்வாறு செயல்படும் என்று எதுவுமே தெரியாது. ஆனால் நண்பர்கள் இருக்கும் தைரியத்தில் தான் துவங்கினேன். அதற்கு முன் பல ஆய்வுகளில் ஈடுபட்டேன். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கல்விமுறை, அதற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம், அதற்கான சட்ட திட்டங்கள் என அனைத்தும் குறித்து தெரிந்து கொண்டேன். அடுத்து ஒவ்வொரு
பல்கலைக்கழகத்தினையும் தொடர்பு கொண்டேன். அவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் நேர்காணல் நடத்தினார்கள்.

அதில் அவர்களுக்கு திருப்தி ஏற்பட, இணைந்து பணி செய்ய வாய்ப்பு கொடுத்தார்கள். தற்போது நான் வெளிநாட்டிற்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் மற்றும் அவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து, வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பி வருகிறேன். மேலும் என்னுடைய நண்பர்கள் அங்கு இருப்பதால், அவர்களும் எனக்கு உதவி செய்து வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை என்னை நம்பிதான் வெளிநாட்டிற்கு படிக்க அனுப்புகிறார்கள்.

அதனால் அவர்கள் படிப்பு முடியும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். அவர்களுடன் நான் எப்போதும் தொடர்பில் இருப்பேன்’’ என்றவர் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள பல்லைக்கழகத்தில் மாணவர்களை படிக்க அனுப்பி வைக்கிறார்.

‘‘இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானவர்கள் ெவளிநாட்டில் படிப்பது மட்டுமில்லை, அங்கு நல்ல வேலையில் செட்டிலாக வேண்டும் என்று விரும்புகிறார்கள். இங்கு பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த பலர் அங்கு சென்ற பிறகு அவர்களின் நடவடிக்கையில் பல மாற்றங்களை பார்க்க முடிகிறது. அவர்கள் தன்னம்பிக்கையோடு செயல்படுகிறார்கள். தங்களுடைய வேலையினை பார்த்துக் கொள்ளும் பொறுமை ஏற்படுகிறது.

சம்பாதிக்கும் பணத்தினை அளவோடு செலவு செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். நான் பெரும்பாலும் வெளிநாட்டில் டாக்டர் படிப்பிற்காகத்தான் மாணவர்களை அனுப்பி வைக்கிறேன். +2ல் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருப்பார்கள். ஆனால் நீட் தேர்வில் அவர்களால் பெரிய அளவில் தேர்ச்சிப் பெற்றிருக்க முடியாது. இதனால் பல மாணவர்கள் மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு ரஷ்யாவில் டாக்டர் படிக்க ஏற்பாடு செய்து தருகிறேன். இதற்கான அனைத்து வேலைகளையும் நானே உடன் சென்று செய்வதால், பெற்றோர்களுக்கும் தங்களின் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள்.

பொதுவாக வெளிநாட்டிற்கு நாம் படிக்க செல்லும் போது அங்குள்ள விசா குறித்த சட்டத்திட்டங்கள் பற்றி விரல்நுனியில் தெரிந்து வைத்திருக்கணும். சில சமயம் விசா நிராகரிக்கப்பட்டு விடும். அதற்கு காரணம் ஒன்று அவர்கள் கேட்ட சான்றிதழ்களை சமர்ப்பித்து இருக்க மாட்டாங்க. இல்லை என்றால் தங்களின் வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தொகையினை வைத்திருக்க தவறி இருப்பார்கள். பெரும்பாலான வெளிநாடுகளை பொறுத்தவரை அங்கு படிக்க வரும் மாணவர்களின் வங்கியில் குறிப்பிட்ட தொகை பணம் உள்ளதா என்று பார்ப்பார்கள். பணம் இல்லாமல் அவர்கள் அங்கு தவிக்கக்கூடாது என்று நினைப்பார்கள். அதனால்தான் ஒவ்வொரு நாட்டிலும் விசாவின் போது குறிப்பிட்ட தொகை கணக்கில் வைத்திருக்க சொல்கிறார்கள். இதனை எல்லா மாணவர்களும் கவனத்தில் கொள்வது அவசியம்.

வெளிநாட்டில் படிப்பது எல்லோருடைய கனவாக இருந்தாலும், அதற்கான பொருளாதார வசதி இருப்பது அவசியம். வசதி படைத்தவர்கள் சொந்தப் பணத்தில் படிப்பார்கள். ஒரு சிலர் வங்கி கல்விக்கான லோன் பெறுவார்கள். சிலருக்கு அந்த வசதியும் இருக்காது, ஆனால் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு சில நாடுகளில்
இலவச கல்வியினை வழங்குகிறார்கள். அதற்கான ஏற்பாடும் நான் செய்து தருகிறேன்.

இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் படிப்பதற்கான கட்டணம் அதிகம். அதனால் ஒருவரால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதற்கு ஏற்ப மட்டுமில்லாமல், அவர்களின் மேற்படிப்பிற்கு உகந்த பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்போம். அதில் அவர்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் தேர்வாகிவிடுவார்கள். ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லும் போது அந்த ெமாழியினை கற்பது அவசியம்.

சில நாடுகளில் IELTS, TOEFL, PTE, GMAT, SAT போன்ற தேர்வுகளில் தேர்ச்சிப் பெற வேண்டும். படித்துக் கொண்டே வேலை பார்க்க ஒரு சில நாடுகளில் அனுமதியுண்டு. அதாவது நான்கு மணி நேரம் வேலை பார்க்கலாம். அதில் வரும் ஊதியம் அவர்களின் சாப்பாடு மற்றும் தங்கும் செலவிற்கு உபயோகமாக இருக்கும். படிக்க மட்டுமில்லாமல் வேலைக்காகவும் நான் ஏற்பாடு செய்து தருகிறேன். மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் போன்ற துறையில் பொறியியல் படித்தவர்களுக்கு ஜெர்மனியில் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது. தற்போது வெளிநாடுகளில் நர்ஸ் வேலைக்கு வரவேற்பு உள்ளது. அந்த துறையில் நல்ல சம்பாத்தியம் பெற விரும்புபவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறேன்’’ என்றார் ஸ்வர்ணலதா.

தொகுப்பு: ஷம்ரிதி

The post வெளிநாடுகளில் படிக்கலாம்! appeared first on Dinakaran.

Related Stories: