1965 மணி நேரம்…81 நாட்கள் 165 பேர் உருவாக்கிய ஆலியாபாட் சேலை

நன்றி குங்குமம் தோழி

அமெரிக்காவில் வருடம் தோறும் நடத்தப்படும் பிரபல ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி மெட்காலா (METGALA). உலகின் மதிப்புமிக்க, மிகவும் கவர்ச்சியான ஃபேஷன் நிகழ்ச்சி இதுவாகும். இதில் பங்கேற்கும் பிரபலங்கள் அணிந்து வரும் ஆடை ரகங்கள் பார்க்கவே மெய்சிலிர்க்கும். இந்த ஆண்டின் மெட்காலா 2024 நிகழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்தது. மெட்ரோபாலிட்டன் மியூஸியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்ட்யூம் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக, உலகின் தலைசிறந்த இசைக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், உச்சத்தில் இருக்கும் திரை நட்சத்திரங்கள் என பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் விதவிதமான ஆடைகளை அணிந்து வந்து பார்வையாளர்களை அசத்தினர்.

உலக அரங்கில் நடத்தி முடிக்கப்பட்ட மியூஸியம் ஆஃப் ஆர்ட் காஸ்டியூம் நிகழ்ச்சியில் அனைவரது பார்வையையும் பெரிதும் கவர்ந்து இழுத்தவர் நடிகை ஆலியாபாட். கைவினைக் கலைஞர்கள், எம்ராய்டரி கலைஞர்கள், டை கலைஞர்கள் என 165 பேர் இணைந்து 1965 மணி நேரம் சுமார் 81 நாட்கள் தங்களின் கடுமையான உழைப்பில், ஆலியாபாட் அணிந்திருந்த சேலையை உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் மிகவும் வித்தியாசமான உடையில் அழகு மிளிர நடந்துவந்த நிலையில், இந்தி நடிகை ஆலியாபாட் பார்வையாளர்களின் கவனம் பெற்று தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். அழகுக்கு அழகு சேர்ப்பதுபோல், கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அழகிய புடவையை ஆலியாபாட் அணிந்துகொண்டு நிற்கும் காட்சி வலைத்தளங்களில் வைரலானது.

நிகழ்ச்சியில் நடந்த நேர்காணலில் “புடவையை விட சிறந்த உடை வேறெதுவும் இல்லை. தலைசிறந்த படைப்புக்கு பின்னால் இருக்கும் கலைஞர்களுக்கு எனது பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டவர், அந்தப் புடவையில் தான் இருக்கும் புகைப்படங்களையும், அதை உருவாக்கிய கலைஞர்களின் வேலைபாட்டையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து, “நேரமில்லை என்பது தொடர்கதைதான்.

ஆனால் எப்போதும் அதிக நேரத்துடனும், அதிக கவனிப்புடனும் செய்யப்படும் கலை வேலைப்பாடுகள் காலம் கடந்தும் நிலைத்திருக்கும். உலகளவில் இந்தியாவின் பெருமையை கொண்டு சேர்க்க நாங்கள் பயணிக்கின்ற இந்தப் பாதையில், நான் அணிந்திருந்த சேலையும் உயிர் பெற்றுள்ளது. நமது பாரம்பரியத்தையும், கலைப் படைப்பையும் பறைசாற்ற சேலையைவிட சிறந்த ஆதாரம் வேறில்லை. தனித்துவம் மிக்க எம்பிராய்டரி வேலைப்பாடுகள், அழகிய ஒளிமிக்க வண்ணக் கற்கள், முத்துகள் என இணைத்து 1920ம் ஆண்டின் ஸ்டைலில் இந்த சேலை கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. இதனை 165 பேர் 1965 மணி நேரம் 81 நாட்கள் உருவாக்கினார்கள்” என்றும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆலியாபாட் குறிப்பிட்டுள்ளார். மெட்காலா நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு டிக்கெட் விலை 75 ஆயிரம் டாலர்கள். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 62 லட்சம் ரூபாய் எனச் சொல்லப்படுகிறது. பார்வையாளர்களுக்கான டிக்கெட் விலை 62 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிகிறது.

இந்த வருடம் நடந்து முடிந்த நிகழ்ச்சியில் பிரபல ஹாலிவுட் பிரபலங்கள் ஜெண்டயா, ஜெனிபர் லோபஸ், நடிகர் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே மற்றும் முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானி உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டு தங்களின் பிரத்யேக ஆடைகளை அணிந்து வந்து மெட்காலா நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தினர்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post 1965 மணி நேரம்…81 நாட்கள் 165 பேர் உருவாக்கிய ஆலியாபாட் சேலை appeared first on Dinakaran.

Related Stories: