சிலம்பத்தையும் விளையாட்டுப் போட்டியாக பார்க்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

தற்காப்புக் கலைகளை கற்றதோடு மட்டுமல்லாமல், சிலம்பத்தில் மூன்று உலக சாதனைகளை செய்து அசத்தி வருகிறார் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மிதுன பிரியா. ‘‘நான் சிலம்ப பயிற்சி எடுத்த காரணத்தால் என்னுடைய உடலும் மனமும் வலுவாக இருப்பதாக உணர்கிறேன். நான் கற்றுக்கொண்ட இந்தக் கலையையும் தற்காப்புக் கலைகளையும் மற்றவர்களுக்கும் சொல்லித்தர வேண்டும் என விரும்புகிறேன்’’ என்கிறார் மிதுன பிரியா. இது குறித்து அவரிடம் பேசும் போது…

‘‘எனக்கு நாமக்கல் பக்கத்தில் இருக்கும் ராசிபுரம்தான் சொந்த ஊர். நான் இப்போது +2 படிக்கிறேன். அம்மா என் சின்ன வயசில் இருந்தே படிப்பு மட்டுமில்லாமல், வேறு ஏதாவது கற்றுக்கொள்வது அவசியம்னு சொல்லிட்டே இருப்பாங்க. எனக்கும் என்ன செய்றதுன்னு குழப்பமாவே இருந்தது. இந்த காலக்கட்டத்தில்தான் எங்க ஊரில் வசிக்கும் பத்மநாபன் அண்ணா மற்றும் சரவணன், பன்னீர்செல்வம் அண்ணன்களும் இலவசமாகவே சிலம்பம் சொல்லிக் கொடுக்கிறாங்கன்னு தெரிய வந்தது.

என் அம்மாவும் ஒரு சமூக சேவகர் என்பதால், ஊரில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு அம்மாவை நன்கு தெரியும். பத்மநாபன் அண்ணாவுக்கும் அம்மாவை தெரியும் என்பதால், அவரே எனக்கு சிலம்பம் கற்றுத் தருவதாக சொன்னார். அப்படித்தான் நான் சிலம்பம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். தினமும் என்னை அவரே வந்து சைக்கிளில் கூட்டிக் கொண்டு போவார். அவரின் பயிற்சிப் பட்டறையில் சிலம்பம் கற்றுக்கொண்டு, மீண்டும் அவரே என்னை வீட்டில் கொண்டு வந்து இறக்கிவிடுவார். நான் சிலம்பம் கற்றுக் கொள்ள தொடங்கியதும் எனக்கு அந்த கலை மேல் தனிப்பட்ட ஆர்வம் ஏற்பட ஆரம்பித்தது. இரண்டு வருடப் பயிற்சிக்கு பிறகு போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பிச்சேன்.

முதலில் குழு போட்டிகளில்தான் நான் கலந்து கொண்டேன். அதன் பிறகு தனியாக போட்டிகளில் பங்கேற்க தொடங்கினேன்’’ என்றவர், சிலம்பம் போட்டிகளில் கலந்து கொள்வது குறித்து சொல்லத் தொடங்கினார். ‘‘அம்மா சமூக சேவகர் என்பதால், பெண்கள் சுயமா முன்னேறணும், சொந்தக் காலில் நிற்கணும், யாரையும் நம்பி இருக்கக்கூடாதுன்னு சொல்வாங்க. சின்ன வயசில் அவங்க சொன்ன அந்த வார்த்தைகள் எல்லாம் என்னுடைய மனசில் அப்படியே பதிந்திருந்தது. ஆனால் நான் சிலம்பம் பயிற்சி எடுக்க ஆரம்பித்த ஆரம்ப காலக்கட்டத்தில் என்னைத் தவிர பெண்கள் யாரும் பயிற்சி எடுக்கவில்லை.

அதே போல் போட்டியிலும் பெண்கள் பங்கு பெறுவதை காண முடியவில்லை. பள்ளியில் என் நண்பர்களிடம் நான் இது குறித்து பேசிய போது, அவர்கள் சொன்ன ஒரே விஷயம், அவர்களின் பெற்றோர் சிலம்பம் பயிற்சிக்கு அனுப்ப விருப்பமில்லை என்பதுதான். ஆனால் அவர்களுக்கு சிலம்பம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும், அவர்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை என்ற ஏக்கம் தெரிந்தது. இவர்களைப் போல் பல பெண்களுக்கு ஆர்வம் இருந்தும் அவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக பிடிச்ச விஷயங்களை செய்ய முடியாமல் இருக்காங்க. என் வீட்டில் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருப்பதால்தான் என்னால் சிலம்பம் கற்றுக்கொள்ள முடிந்தது. மேலும் என் விருப்பங்களும் நிறைவேறியது.

எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும், அது நம் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். நான் சிலம்பம் சுத்தும் போது என் கவனம் முழுக்கவும் சிலம்பம் மீதுதான் இருக்கும். அதனால என்னால் ஒரு விஷயத்தின் மேல் அதிக கவனம் செலுத்த முடிகிறது. அது என் படிப்பிற்கும் நிறைய உதவியது. படிப்பு மட்டுமில்லாமல் நான் எந்த விஷயம் செய்ய முற்பட்டாலும், அதில் முழு கவனத்துடன் செயல்பட முடிகிறது. மேலும் சிலம்ப பயிற்சியால் என்னுடைய உடல் மற்றும் மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

நான் போட்டிகளில் கலந்துக்க தொடங்கியதும் எல்லா போட்டிகளுக்கும் மாஸ்டர்தான் அழைத்துக் கொண்டு போவார். ஒவ்வொரு போட்டியும் எப்படி நடக்கும், சிலம்பம் சுற்றும் போது நாம பின்பற்ற வேண்டிய நுணுக்கங்கள் என அனைத்தும் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அதுதான் என்னை போட்டியில் வெற்றி பெறவும் செய்தது. உள்ளூரில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றதால், அடுத்து மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதியானேன். நாமக்கல்லில் நடைபெற்ற போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தேன்.

தற்போது தேசிய அளவிலான போட்டிகளில் கவனம் செலுத்துகிறேன். அதற்கான சிறப்பு பயிற்சியும் மேற்கொண்டேன். தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தேன். இதுவரை நான் 19 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் மற்றும் 3 உலக சாதனைகளையும் செய்துள்ளேன். இவ்வளவு பரிசுகள் பெற்றும் கல்லூரியில் சேரும் போது, சிலம்ப போட்டிக்கான சான்றிதழ்களை காட்டிலும், மற்ற விளையாட்டிற்கான சான்றிதழுக்குதான் அதிக அளவில் மதிப்பு கொடுக்கிறார்கள். சிலம்பம் போட்டியினை தற்காப்புக் கலை என்ற அளவில்தான் பார்க்கிறார்கள். மாஸ்டரும் என்னை சிலம்பத்துடன் வேறு விளையாட்டும் பயில சொன்னதால், தற்போது வில்வித்தையினை அவரிடமே பயிற்சி எடுத்து வருகிறேன். இந்த விளையாட்டிலும் பல வெற்றிகளை பெற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை’’ என்கிறார் மிதுன பிரியா.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post சிலம்பத்தையும் விளையாட்டுப் போட்டியாக பார்க்க வேண்டும்! appeared first on Dinakaran.

Related Stories: