இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்கள் 25 பேரை மீட்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

கொழும்பு: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் கடந்த டிசம்பர் 9ம் தேதியன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் இதுபோல தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், IND-TN-06-MM- 7675 பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும், IND-PY-PK-MM-1499 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்களும், டிசம்பர் 9ம் தேதியன்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்று கவலைபடத் தெரிவித்துள்ளார்.

அதோடு, IND-TN-10-MM-558 என்ற பதிவெண் கொண்ட மற்றொரு மீன்பிடிப் படகு இலங்கை கடற்படையின் ரோந்துக் கப்பலால் சேதப்படுத்தப்பட்டுள்ளதையும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது, நமது மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்க உரிய நடவடிக்கைகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மேற்கொள்ள உத்தரவிடுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை கேட்டுக் கொண்டுள்ளார்.

The post இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்கள் 25 பேரை மீட்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: