ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில், குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் சண்முகபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் மேக்ஸ்வெல் (55). அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூங்கியபோது, அங்கு பைக்கில் வந்த 5 பேர், வீட்டுற்குள் புகுந்து மேக்ஸ்வெலை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்தூர் போலீசார், மேக்ஸ்வெலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மேக்ஸ்வெலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மேக்ஸ்வெலுக்கு மோசஸ் (22), லாரன்ஸ் (23) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் (30) என்பவர் கொலை வழக்கில் மோசஸ் மற்றும் லாரன்ஸ் கைது செய்யப்பட்டனர். இதற்கு பழிக்குப்பழியாக மோசஸ், லாரன்ஸ் ஆகியோரின் தந்தையான மேக்ஸ்வெல் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார் அறிவுறுத்தல்படி, செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் கே.எஸ்.பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கிரி மற்றும் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு, தப்பிய கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சந்தேகத்தின்பேரில் நேற்று 5 பேரை பிடித்து தீவிர விசாரிக்கின்றனர்.

The post ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை appeared first on Dinakaran.

Related Stories: