மனவெளிப் பயணம்

நன்றி குங்குமம் டாக்டர்

நவீன குழந்தை வளர்ப்பின் சவால்கள்!

தெரிந்த பெண் ஒருத்தர் என்னுடைய வீட்டிற்கு வந்தபோது எங்க அம்மாவிடம் பேரன்டிங் ஒர்க்ஷாப் போய்ட்டு வந்தேன் என்றார். எங்க அம்மாவுக்கு மட்டுமில்லை, தொண்ணூறுகளில் இருக்கும் பல அம்மாக்களுக்கு இந்த வகுப்பு எல்லாம் எதற்கு என்பதும், தேவையா என்பதும் அடிப்படை கேள்வியாக இருக்கிறது. இன்றைய தலைமுறைகளில் இருக்கும் பெற்றோர்களில் இத்தனை பெண்கள் ஏன் குழந்தைகள் வளர்க்கும் பயிற்சி வகுப்பில் சேர்கிறார்கள் என்று பலரும் விதம்விதமாக இந்தக் கேள்வியினை கேட்கிறார்கள்.

என்னுடைய அம்மாவில் இருந்து மற்ற தோழிகளின் அம்மா வரை உங்களை வளர்க்க எல்லாம் இந்த மாதிரி கஷ்டப்படவில்லை. இப்ப எதற்காக, இம்மாதிரியான கிளாஸ் எல்லாம் போகணுமா என்பது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது என்கிறார்கள் தொண்ணூறுகளின் அம்மாக்கள்.அப்ப என்னதான் தலைமுறை மாற்றம் நடக்கிறது என்றால், தொண்ணூறுகளில் இருப்பவர்களை மில்லினியம் தலைமுறை என்றும், இரண்டாயிரத்துப் பத்தில் இருப்பவர்களை ஆல்பா தலைமுறை என்று வகைப்படுத்துகிறார்கள்.

தொண்ணூறுகளில் படித்தவர்கள் தங்களுடைய ஆறு வயதில்தான் தன்னுடைய ஒரு காதில் இருந்து மற்றொரு காதைத் தொட்டு, அதன்பின் தான் பள்ளி என்ற வளாகத்துக்குள் நுழைந்தனர். பள்ளிக்கூடம் என்றாலே படிப்பு, விளையாட்டு, இதர போட்டிகள் இவ்வளவு தான் என்று இருந்தது. அதில் மதிப்பெண் என்றாலே பாஸ் ஆகி விட்டால் போதும். அதை மீறி நல்ல மார்க் என்றால் சந்தோஷம், இல்லையென்றால் ஒரு சிறு கவலை அவ்வளவுதான் என்றளவில் இருந்தது. பெற்றோர்களும் கல்வி சார்ந்த பெரிய எதிர்பார்ப்பினை குழந்தைகள் மீது வைக்கவில்லை. கல்வி என்பது இவர்களைப் பொறுத்தவரையில் வருமானம் சார்ந்த விஷயத்திற்கு மிகவும் முக்கியமாக இருந்தது.

ஆனால் இன்றைய ஆல்பா தலைமுறையினரை அப்படி எடுக்க முடியாது. அவர்கள் பெரும்பாலும் ஊடகத்தால் வழங்கப்படும் சிந்தனையின் தாக்கத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். போனதலைமுறையை விட இன்றைய தலைமுறை குழந்தைகள் அதிக முதிர்ச்சியுடன் இருக்கிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகளின் சிந்திக்கும் திறன், விளையாட்டு, பாடம் சாராத பல விஷயங்கள் அவர்களின் பார்வைக்கு இருக்கிறது. அதனால் பெற்றோரின் தாக்கத்தை விட ஊடகங்களின் தாக்கங்கள் அதிகமாக இருக்கிறது.

ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய கல்வி, தன்னுடைய தேடல், தன்னுடைய ஆசை, தனக்கான அங்கீகாரம் என்று அவர்களின் பார்வையில் இருக்கும் விஷயங்களை செயல்படுத்த பார்க்கிறார்கள். இதில் என்ன ஊடகங்களின் தாக்கம் இருக்கிறது என்றால், அவர்களின் கற்பனையில் இருக்கும் அத்தனை எண்ணங்களுக்கும் பதிலாக தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கிறது.

உதாரணமாக, நான்கு வயது சின்னப் பையனை ஏழு வயது சின்னப்பையன் பாலியல் ரீதியாக விளையாடலாம் என்று அவனைக் காயப்படுத்தியிருக்கிறான். ஏழு வயது பையனிடம் ஏன் பா தம்பி இப்படி செய்தாய் என்று கேட்டால், மொபைலில் பார்த்தேன், அதை மாதிரி செய்யலாம் என்று செய்தேன் என சொல்கிறான். இதில் யாரைத் திட்ட முடியும். யாருக்கு விழிப்புணர்வு கொடுக்க முடியும்.Kids Getting Older Younger (KGOY) இன்றைய குழந்தைகள் மிகவும் இளம்பருவத்திலேயே அதிக பொதுஅறிவுக் கூர்மையுடன் திகழ்கிறார்கள் என்கின்றனர் சமூகவியலாளர்கள். ஆனால் இதன் மறுப்பக்கம் பார்த்தால் அதன் வீரியம் வேறு விதமாக இருக்கிறது.

பொதுவாக குழந்தைகளுக்கான மனநலப்பிரிவில் ஒரு நாள் இருந்து பார்க்கும் போது, அதன் தன்மை தெரியவரும். குழந்தைகளின் ஐகியூ சார்ந்த சிகிச்சைகளுக்கு வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. குழந்தை பிறந்தது முதல் இரண்டு வருடங்கள் மூளையின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்றும், அதன்பின் மந்தமாக இருக்கிறான் என்றும் வருகிறார்கள்.

குழந்தைகளின் பேச்சு என்பது வளர வளர வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் பேச்சு சரிவர இல்லாத காரணத்தினால் அதற்காக சிகிச்சைக்கு வரும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். குழந்தைகளின் கற்றல்திறன் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. நன்றாக பேசுகிறான், நன்றாக வரைகிறான் என்று பெற்றோர்கள் கூறுவார்கள். ஆனால் படிக்க மட்டும் அவர்களால் முடியவில்லை.

உதாரணமாக ஒன்றில் இருந்து பத்து வரைக்கும் எழுதுவதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ளும் குழந்தைகள் இருக்கிறார்கள். பெற்றோர்கள் பள்ளிகளிலும் கல்விக்கான தொகை செலுத்தும்போது, கற்றல் குறைபாட்டால் படிக்கவில்லை என்றதும், ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே ஒரு மனக்கசப்பு உருவாகி விடுகிறது. கற்கும் திறனுக்கு எல்லாம் சிகிச்சையா என்பது இன்றைய பெற்றோர்களுக்கு புதிய விஷயமாக இருக்கிறது.

கல்வி சார்ந்த அழுத்தங்கள், பயங்கள், தன்னால் படிக்க முடியாமல் போய்விட்டால், அதில் ஏற்படும் தோல்வியின் கற்பனைகள் இப்படி கல்விக்கும், மாணவர்களுக்கும் இடையே நிகழும் தினம் தினம் பதற்றங்கள் யோசிக்க முடியாத அளவுக்கு வீரியமாக மாணவ/ மாணவிகள் மனப்பதற்றத்தில் இருக்கிறார்கள்.வளரிளம் பருவ வயதில் வரும் எதிர்பாலின ஈர்ப்பு சார்ந்த விஷயங்களின் தாக்கமும், அதில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் அவர்களை மிகவும் குழப்புகிறது.இது போக போதைப்பழக்கம், பார்ன் படங்கள் பார்ப்பது, எளிதாகப் பாலியல் சார்ந்த விஷயங்களால் பாதிக்கப்படுவது என்று வளரிளம் பருவ மாணவ/மாணவிகளின் பயமும், அதன் கற்பனையும் அவர்களை நிலையாக யோசிக்க வைக்க முடிவதில்லை.

அது போக இங்கு எல்லோரும் கல்வி சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புகள் பற்றித் தான் பேசுகிறார்கள். அதை மீறி குழந்தைகளின் ஐகியூ மற்றும் கற்றல் குறைப்பாடுகளுக்கு என்று தினமும் வகுப்புகள் நடப்பதை பற்றி எவரும் வெளிப்படையாக பேசப் பயப்படுகிறன்றனர். ஆக்குபேஷனல் தெரபி கிளாஸ், லேர்னிங் டிஸ்எபிலிட்டி கிளாஸ், ஸ்பீச் தெரபி கிளாஸ் என்று மனரீதியான வளர்ச்சியில் குறைபாடு உள்ள குழந்தைப்பருவ வயதில் இருக்கும் மாணவர்களுக்கு என்று இவ்வகுப்புகள் இருக்கிறது.

இத்தனை விதமான பிரச்சனைகள் இருக்கும் போது, பெற்றோர்கள் யாரைப் பார்ப்பது, யாரிடம் கேட்பது, என்ன பேசுவது என்று தாங்கள் பெற்ற குழந்தைகளின் குறைகளை மறைத்தும், தீர்வையும் தேடும் குடும்பங்களின் எண்ணிக்கை நாம் யோசிக்க முடியாத எண்ணிக்கைகளில் இந்தியாவில் உருவாகிக் கொண்டு இருக்கிறது. யார் கையையாவது பற்றிக்கொண்டு எப்படியாவது தம் பிள்ளைகளை நன்றாக கொண்டு வர வேண்டும் என்ற பதற்றத்தில் இருக்கும் பெற்றோர்களை பார்க்கும் சூழலில்தான் நாம் இருக்கிறோம். அதற்காகத் தான் தங்களுடைய குடும்பம் சார்ந்த விஷயங்களை யாரும் எந்த ஜட்ஜெமென்ட் செய்யாமல் கேட்பதற்கும், அவர்களுக்கு பேச ஒரு இடமும், அதற்கான தீர்வையும் கொடுக்கும் நபரையும் தேடுகிறார்கள். அதற்கேற்றாற் போல் விதம் விதமான தலைப்புகளுடன் பலதரப்பட்ட நபர்கள் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள்.

தினம் தினம் பெற்றோர்களுக்கு ஏற்படும் இத்தனை விதமான பயங்களையும், பதற்றங்களையும் பற்றி என்றுமே நம் மக்கள் அறிவுரையைத் தான் எளிதாக வழங்குகிறார்கள். இந்த அறிவுரை எல்லாமே அந்த நேரத்திற்கு சரியாக இருக்கும். ஆனால் குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் வளர்ச்சி சார்ந்த திறனுக்கு எல்லாம் மருத்துவம் சார்ந்த தெளிவான விழிப்புணர்வு தான் இங்கு தேவைப்படுகிறது.

அனுபவத்தில் வழங்கும் அறிவுரை என்பது போலி அறிவியல் கருத்தாகத்தான் மருத்துவத்துறையில் பார்க்கப்படும். அதனால் இங்கு குழந்தை வளர்ப்பு பற்றிய பயிற்சி வழங்குபவர்கள் கண்டிப்பாக அவர்களின் சுயஅனுபவங்களில் இருந்தும், அவர்களின் தனிப்பட்ட சிந்தனைகளில் இருந்தும் வகுப்புகளின் தாக்கங்கள் இருக்கக்கூடாது. இம்மாதிரியான வகுப்புகள் கலை,அறிவியல் கல்லூரி வளாகங்களில், மனநல மருத்துவமனை சார்பாக நடத்தப்படும் வகுப்புகள், உளவியல் துறைகளில் சிறந்து விளங்கும் தனியார் நிறுவனங்கள் என பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள்.

இங்கு குழந்தைப்பருவத்தில் இருந்து வயதானவர்களின் உளவியல் நிலைகளை நமக்கு தெளிவாக சொல்லிக் கொடுப்பார்கள். இதில் பங்குபெறுபவர்கள் அனைவருமே மனநல மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட், ஸ்பெஷல் சைல்ட் நிபுணர்கள் என்று அதற்கான துறை நிபுணர்கள் மட்டுமே வகுப்பு எடுப்பார்கள்.

இதனால் உலகசுகாதார நிறுவனத்தில் உள்ள தகவலின்படி, உளவியல் துறையில் நடக்கும் மாற்றங்களை சர்வே ரீதியாகவும், அதற்கான தீர்வாக என்ன செய்து இருக்கிறார்கள் என்றும் கூறுவார்கள். அறிவு என்பது ஒரு அறிவியல் சார்ந்த சிந்தனையாகத் தான் மருத்துவர்கள் பார்க்கிறார்கள். அந்த அறிவைக் கற்றுக் கொள்ளும் நெருக்கடியான சூழலில் நாம் இருக்கிறோம். அதனால் நம்முடைய உளவியல் மாற்றங்களை சரியான நபர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள முயற்சி பண்ணுங்கள்.

அதனால் இனி இம்மாதிரியான உளவியல் சார்ந்த வகுப்புகள் தேவையா என்றால், கண்டிப்பாக தேவை என்றே தைரியமாக சொல்லலாம். உளவியல் பிரச்சனை என்பது தனிநபர் பிரச்சனை இல்லை என்றும் சமூகம் சார்ந்த பிரச்சனையாகத்தான் பார்க்க வேண்டும். அதனால் அதை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்குள் நாம் அனைவருமே இருக்கிறோம்.

The post மனவெளிப் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: