சில்லி பாயின்ட்…

* தமிழ்நாடு வாலிபால் சங்கம் சார்பில் ‘தமிழ்நாடு வாலிபால் லீக் (டிஎன்விஎல்)’ தொடரின் முதல் சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது. இதில் சென்னை ராக்ஸ்டார்ஸ், விழுப்புரம் சூப்பர் கிங்ஸ், கடலூர் வித் அஸ், கிருஷ்ணகிரி புல்ஸ், விருதுநகர் கிங் மேக்கர்ஸ், குமரி ஃபீனிக்ஸ் என 6 அணிகள் களமிறங்குகின்றன. ரவுண்டு ராபின் முறையில் லீக் ஆட்டங்கள் ஜன.10ம் தேதி வரை நடைபெறும். முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இறுதி ஆட்டம் ஜன.12ம் தேதி நடக்கும். போட்டிகள் அனைத்தும் மயிலாப்பூர், சாந்தோம் மேனிலைப் பள்ளி உள்ளரங்கில் நடக்கிறது.

* பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்குகிறது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி. இந்த ஆட்டத்திலும் வென்று பாக் அணியை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது. ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னர் இந்த போட்டியுடன் டெஸ்ட் அரங்கில் இருந்து விடைபெற உள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்தும் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 25வது ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை ஷர்வானிகா 3வகையான ஆட்டங்களில் சாம்பியன் பட்டம் வென்றார். நாடு திரும்பிய அவருக்கு, பயிற்சி அளித்து வரும் ஹட்சன் செஸ் அகடமியின் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.

* நாடு முழுவதும் 2023ல் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 24 பெண்கள், இந்திய சாதனை பெண்கள் அமைப்பு சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த பவர் லிப்டிங் சர்வதேச வீராங்கனையும், பல் மருத்துவருமான டாக்டர் ஆர்த்தி அருண் விளையாட்டுத் துறை சாதனையாளருக்கான விருது பெற்றார்.

* பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயாவுடன் நேற்று மோதிய விக்டோரியா அசரெங்கா (பெலாரஸ்) 6-1, 7-6 (10-8) என்ற நேர் செட்களில் வென்றார். அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் 5-7, 6-7 (7-9) என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் அரினா ரோடியோனோவாவிடம் போராடி தோற்றார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: