அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு!!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனைக்குப் பிறகு அமலாக்கத் துறையினர் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறியதால் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அவர் உட்படுத்தப்பட்டார். அவருக்கு வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே செந்தில்பாலாஜிக்கு 3 ரத்தக்குழாய் அடைப்புகள் இருப்பதாகவும், அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் எனவும் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து செந்தில்பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ’ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும்’ என முறையிடப்பட்டது. மேலும், “அமலாக்கத் துறை கைது செய்வதற்கு முன்பே, கடந்த காலங்களில் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அங்கிருக்கக்கூடிய மருத்துவர்கள் மூலம்தான் சிகிச்சைகள் எடுத்துக் கொண்டார். அதனால், தற்போது அவருக்கு இதயத்தில் அடைப்புகள் இருப்பதையடுத்து, அறுவைசிகிச்சை செய்ய வேண்டி இருப்பதால், அவரை உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும்” என செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

இதற்கு அமலாக்கத் துறை தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதன் தரப்பில், “தமிழகத்திலேயே மிகச் சிறந்த மருத்துவமனை என்று சொல்லக்கூடிய ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, தற்போது வேறொரு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு என்ன காரணம்? அதுபோல், டெல்லியைச் சேர்ந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு செந்தில் பாலாஜியை ஆய்ந்தபிறகுதான் மற்ற மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்க முடியும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில், செந்தில்பாலாஜியின் மனைவியின் கோரிக்கையை ஏற்று, நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்கரவர்த்தி அமர்வு, செந்தில்பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், “ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது என்பதும், உரிய சிகிச்சை தர வேண்டும் என்பதும் குடும்பத்தாரின் கடமையாக இருக்கிறது. ஆகையால், அவர்கள் விருப்பப்படும் மருத்துவமனையில், அவருக்கு மருத்துவம் அளிப்பதில் எந்தவித தடையும் இருக்கக்கூடாது. அந்த உரிமை, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நீதிமன்றக் காவலிலேயே செந்தில்பாலாஜி நீடிக்கலாம். அப்படியே நீதிமன்றக் காவலில் அவர் நீடித்தாலும் அமலாக்கத் துறை நியமிக்கும் மருத்துவர்கள் குழுவும் அவரைப் பரிசோதிக்கலாம். அரசு மருத்துவர்களின் பரிந்துரையை சந்தேகிக்க இயலாது” எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு ஜூன் 21ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு!! appeared first on Dinakaran.

Related Stories: