பள்ளி மாணவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்: 3 மணி நேரத்தில் போலீஸ் மீட்டது, 2 பேர் சிக்கினர்

மதுரை: மதுரையில் 14 வயது பள்ளி மாணவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த கும்பலிடமிருந்து 3 மணி நேரத்தில் மாணவனை போலீசார் மீட்டனர். கடத்தல் கும்பலில் 2 பேர் சிக்கினர். மதுரை, எஸ்எஸ் காலனியை சேர்ந்தவர் மைதிலி ராஜலெட்சுமி. சமீபத்தில் கணவர் இறந்து விட்டார். இவருக்கு பைபாஸ் சாலை பகுதியில் காம்ப்ளக்ஸ் மற்றும் வீடுகள் உள்ளன. இவரது மகன் தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று காலை ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற மாணவனை, ஒரு கும்பல் ஆட்டோ டிரைவர் பால்பாண்டியுடன் சேர்த்து, கத்தியை காட்டி மிரட்டி கடத்திச் சென்றது. டிரைவரையும் வெட்டிக் காயப்படுத்தியது. தொடர்ந்து ஆட்டோ டிரைவர் பால்பாண்டியின் செல்போன் மூலம், மைதிலி ராஜலெட்சுமியிடம் பேசிய கடத்தல்காரன், ‘மகன் உயிருடன் வேண்டுமென்றால் ரூ.2 கோடி கொடுக்க வேண்டும். பணம் வராவிட்டால் சிறுவனை கொலை செய்து விடுவேன். அரை மணி நேரத்தில் நீ ரவுண்டானா வரணும். இதை போலீசில் சொன்னாலும் பையனை சடலமாக தான் பார்க்கணும்’ என்று மிரட்டினார்.

அதற்கு பதிலளித்த தாய், ‘பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு போயிக்கிட்டு இருக்கேன். என்னங்கடா இது…. எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டு இப்படி. என்னையப்பத்தி முழுசா விசாரிச்சா தெரியும். நான் என்ன நிலைமையில் இருக்கேன்னு..’ என்று கூறுயுள்ளார்.  இதுகுறித்து எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் தாயார் மைதிலி ராஜலெட்சுமி புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிந்த இன்ஸ்பெக்டர் காசி தலைமையிலான தனிப்படை போலீசார், சிறுவனை கடத்தி மிரட்டிய கும்பல் இடத்தை செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்து, அக்கும்பல் சென்ற ஆட்டோவை விரட்டிச் சென்றது.

போலீசார் தங்களை கண்டறிந்து, விரட்டுவதை தெரிந்த கும்பல், மாணவன், ஆட்டோ டிரைவர் இருவரையும், மதுரை நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் ஆட்டோவுடன் அப்படியே விட்டு விட்டு, அங்கு வந்த காரில் ஏறி தப்பிச் சென்றது. கடத்தல் கும்பலை போலீசார் பின்தொடர்ந்து விரட்டினர். இதில் 2 பேர் சிக்கினர். மைதிலி ராஜலட்சுமியின் கணவர் பலரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும், இதன்பேரிலேயே கும்பல் கடத்தி பணம் பறிக்க முயன்றிருக்கலாம் எனத்தெரிகிறது.

மேலும், ஆட்டோ டிரைவருக்கும், கும்பலுக்கும் தொடர்பிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. சிக்கியவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவன் காணாமல் போனதாக கூறி மிரட்டல் விடுத்து கடத்திச் சென்ற சம்பவத்தில் 3 மணி நேரத்தில் மாணவனை தனிப்படை போலீசார் மீட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post பள்ளி மாணவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்: 3 மணி நேரத்தில் போலீஸ் மீட்டது, 2 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: