கொரோனா காலத்தில் டிவிட்டர் மூலம் அவதூறு பரப்பி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர்: வராகியின் வங்கி கணக்குகளை முடக்கியது போலீஸ்

சென்னை: கொரோனா காலத்தில் கோடிகளை சுருட்டியவர் என அவதூறாக டிவிட் செய்து, வாட்ஸ்அப் கால் மூலம் ரூ.10 லட்சம் பணம் கேட்டு தன்னை மிரட்டியதாக போலி பத்திரிகையாளர் வராகி மீது சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் போலீசில் பகீர் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுபோன்று வராகி குறித்து திடுக்கிடும் பல புகார்கள் குவிந்து வருவதால் அவரது வங்கி கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர். சென்னை ஊரப்பாக்கத்தில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணம் மூலம் மயிலாப்பூரை சேர்ந்த மங்களம் என்பவரால் அவரது பேரன் சாரதி வீரராகவன் என்பவருக்கு செட்டில்மெண்ட் ஆவணமாக கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த ஆவணங்கள் போலி என்பதால் சார் பதிவாளர் வைத்தியலிங்கம் பதிவை நிறுத்தி வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த போலி பத்திரிகையாளர் வராகி (எ) கிருஷ்ணகுமார் (50), சார்பதிவாளர் வைத்திலிங்கத்தை நேரில் சென்று மிரட்டி ரூ.50 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வராகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே வராகி வசித்து வரும் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், வராகி தமிழ்நாடு முழுவதும் அரசு அதிகாரிகளை குறிவைத்து அவர்கள் தொடர்பாக தனது டிவிட்டரில் பதிவு செய்து மிரட்டி பல கோடி ரூபாய் வரை பணம் பெற்றதற்கான ஆவணங்கள், கிளம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைந்த பிறகு, அதனை சுற்றி காலியாக உள்ள இடத்தை தனது ரியல் எஸ்டேட் கூட்டாளிகளுடன் சேர்ந்து போலி பத்திரம் தயாரித்து மோசடி செய்ததற்கான ஆவணங்கள், அரசு முத்திரைகள், கணினி, பென்டிரைவ் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, வராகி வருமானத்திற்கு மீறி, பல கோடி ரூபாய் பணத்தை அவரது வங்கி கணக்குகள் மூலம் கையாண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து வராகியின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனிடையே சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் காவல்துறை அறிவித்த தொலைபேசி மூலம் வராகி மீது புகார் அளித்துள்ளார். புகார் குறித்து போலீசார் கூறுகையில், தமிழ்நாட்டிலேயே மிக பெரிய அரசு மருத்துவமனையின் டீன் தேரணிராஜன், ‘கொரோனா காலத்தில் பல கோடி ரூபாயை சுருட்டினார்’. என வராகி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பிறகு தேரணிராஜனை வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொண்டு, ரூ.10 லட்சம் பணம் கொடுக்கவில்லை எனில், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார்கள் அளித்து நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டியுள்ளார். மருத்துவர் தேரணிராஜன் இதற்கு சம்மதிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த வராகி, தனது “வார்ரூமில்” அமர்ந்து கொண்டு டீன் தேரணிராஜன் குறித்து யூடியூப் மூலம் அவதூறாக பேசியுள்ளார். தற்போது போலீசார் வராகியை கைது செய்து விசாரித்து வருவதால் டீன்தேரணிராஜன், தொலைபேசி மூலம் பேசி புகார் அளித்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். அதேபோல், தாம்பரம் சார் பதிவாளர் பாடலிங்கத்தை மிரட்டி ரூ.50 லட்சம் ரொக்கம், சேலையூர் சார் பதிவாளர் மஞ்சுவை மிரட்டி ரூ.30 லட்சம் பணம், எழும்பூரில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவராக இருந்த டாக்டர் ஒருவரை மிரட்டி ரூ.10 லட்சம் பணமும் பெற்றுள்ளார் வராகி. இதுபோல் பலரிடமும் பணம் பறித்து வந்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபோன்று கடந்த 2 நாட்களில் மட்டும் வராகி மீது 20க்கும் மேற்பட்ட நபர்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

* புகார் அளிக்க அவசர எண்கள் அறிவிப்பு
போலி பத்திரிகையாளர் வராகி குறித்து புகார்கள் அளிக்க 044-23452324 மற்றும் 044-23452325 ஆகிய தொலைபேசி எண்களை போலீசார் அறிவித்துள்ளனர். இந்த எண்களை தொடர்பு கொண்டு தங்களின் புகாரினை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர்.

* வராகியின் பணமோசடியால் சிக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள்
கொலை மிரட்டல், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள போலி பத்திரிகையாளர் வராகியின் வீடு மற்றும் அவரது தொடர்புடைய இடங்களில் போலீசார் சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதில் வங்கி தொடர்பான சில ஆவணங்களை ஆய்வு செய்தபோது, வராகி மிரட்டி பணம் பறிக்கும் மோசடிக்கு, அதிகாரமிக்க பதவியில் இருந்து அண்மையில் அதிகாரம் இல்லாத பதவிக்கு மாற்றப்பட்ட சில ஐபிஎஸ் அதிகாரிகளும் பலவகையில் உடந்தையாக இருப்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில்தான் வராகி, அதிகார மிக்க அரசு அதிகாரிகளை நேரடியாக சென்று மிரட்டி பணம் பறித்துவந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே வராகியின் மோசடிக்கு மறைமுகமாக உதவிய சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளும் இந்த விசாரணையில் சிக்குவார்கள் எனக் கூறப்படுகிறது.

The post கொரோனா காலத்தில் டிவிட்டர் மூலம் அவதூறு பரப்பி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர்: வராகியின் வங்கி கணக்குகளை முடக்கியது போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: