உதவித்தொகை பெற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

 

கிருஷ்ணகிரி, நவ.8: மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக மாதம் ஒன்றுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200-ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ம், மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400ம், பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3-ஆண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதே போல், மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்துள்ள பதிவுதாரர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முறையே ரூ.600, ரூ.750, ரூ.1000 வீதம் மாதம் ஒன்றுக்கு வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை https://tnvelaivaaippu.gov.in என்கிற இணைதளத்தில் இருந்து விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது வேலைவாய்ப்பு அட்டையுடன் விண்ணப்ப படிவத்தினை நேரிலும் பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பத்தில் வயது வரம்பு, தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், விண்ணப்பத்துடன், அனைத்து கல்வி சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, புகைப்படம், ஆதார் கார்டு, குடும்ப அட்டை மற்றும் வங்கியின் கணக்கு புத்தகம் உள்ளிட்டவையின் நகல்கள் இணைத்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சமர்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சமர்பிக்க வருகிற 30ம் தேதி கடைசி நாளாகும். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவராக இருப்பின் சுய உறுதிமொழி ஆவணம் சமர்பிக்க வேண்டும்.  இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

The post உதவித்தொகை பெற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: