ஒரே பாலின திருமணம்; 7 மாநிலங்கள் எதிர்க்கின்றன: உசச் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: ஒரே பாலின திருமணத்தை ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் உள்பட 7 மாநிலங்கள் எதிர்ப்பதாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குழந்தை உரிமைகள் அமைப்பான என்சிபிசிஆர் சார்பில் வாதிடும் போது,’ ஒரே பாலின ஜோடிகள் திருமணம் செய்யும் போது தாய்மை அடைய முடியாது. அவர்கள் குழந்தை பெற முடியாது. அதனால் குடும்பம் என்ற நிலையை அடைய முடியாது’ என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாடி வாதிட்டார்.

அப்போது,’ தனி ஒரு நபர் கூட ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம். அவர் அல்லது அவள் ஒரு பாலின உறவில் இருக்கலாம். நீங்கள் உயிரியல் ரீதியாக பிறக்கும் திறன் கொண்டவராக இருந்தாலும் நீங்கள் தத்தெடுக்கலாம். உயிரியல் ரீதியான பிறப்பு கட்டாயம் இல்லை’ என்று தலைமை நீதிபதி கூறினார். ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,’ ஒரே பாலின திருமணத்தை உபி, மணிப்பூர், மகாராஷ்டிரா, சிக்கிம், ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளன. அந்த கடித நகல் அமர்வு முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.

இதே போல் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,’ ஒரே பாலின ஜோடிகள் திருமணம் செய்ய அனுமதி அளிப்பது இந்து திருமண சட்டத்திற்கு எதிரானது. இதுபோன்ற தாராள கொள்கைகள் நமது கலாச்சாரத்தை புரட்டிப்போட்டு விடும். அதோடு மற்ற மதங்கள், வெளிநாடுகள் நம் மீது ஆதிக்கம் செலுத்த வாய்ப்பாக அமையும்’ என்று தெரிவித்து உள்ளது.

சந்திரசூட் விலக மறுப்பு: ஒரே பாலின திருமண வழக்கில் இருந்து தலைமை நீதிபதி சந்திரசூட் விலக வேண்டும் என்று கூறி அன்சன் தாமஸ் என்பவர் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அவர் நேற்று வழக்கு விசாரணையின் போது காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார். அவரது மனுவை பார்த்த தலைமை நீதிபதி சந்திரசூட்,’ நன்றி மிஸ்டர் தாமஸ். உங்கள் மனு நிராகரிக்கப்படுகிறது’ என்று கூறி விசாரணையில் இருந்து விலக மறுத்துவிட்டார்.

The post ஒரே பாலின திருமணம்; 7 மாநிலங்கள் எதிர்க்கின்றன: உசச் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: