ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள் விரைவில் விடுவிப்பு: பிரதமர் மோடியிடம் அதிபர் புடின் உறுதி

மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி அளித்துள்ளார். இந்தியா, ரஷ்யா இடையேயான 22வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் மாஸ்கோ சென்றடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அதிபர் புடின் இரவு விருந்தளித்தார். கடந்த 2022ல் உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் ரஷ்ய பயணம் இது. உக்ரைன் போருக்கு பிறகு ரஷ்யா மீது அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி வருகிறது. அதோடு, போர் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்காத இந்தியா, அந்நாட்டுடனான வர்த்தக உறவையும் மேலும் வலுப்படுத்தி உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட தனது ராணுவத்திற்காக ஆட்தேர்வு மூலம் வெளிநாட்டவர்களையும் ரஷ்யா சேர்த்து வருகிறது. அந்த வகையில் இந்தியர்கள் சிலரும் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்துள்ளனர். கடந்த மாதம் 11ம் தேதி ரஷ்ய ராணுவத்தால் பணி அமர்த்தப்பட்ட 2 இந்தியர்கள் உக்ரைன் போர்க்களத்தில் மரணமடைந்தனர். இதுவரை 4 இந்தியர்கள் இறந்துள்ளனர். இதனால் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து இந்தியர்களையும் திருப்பி அனுப்ப வேண்டுமென இந்தியா தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி, அதிபர் புடினிடம் இரவு விருந்து நிகழ்ச்சியில் வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த புடின் இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்நிலையில், பயணத்தின் 2ம் நாளான நேற்று மாநாட்டின் முக்கிய நிகழ்வாக பிரதமர் மோடி, அதிபர் புடின் பங்கேற்ற உச்சி மாநாடு நடந்தது. அப்போது, ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிபர் புடின் பிரதமர் மோடியிடம் உறுதி அளித்துள்ளார். மேலும், வர்த்தகம், பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் போன்ற துறைகளில் இந்தியா-ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பைப் பன்முகப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பில் பிரதமர் மோடி அதிபர் புடினிடம் பேசியதாவது: கடந்த 25 ஆண்டாக இந்தியா, ரஷ்யா இடையே நம்பிக்கையான நட்புறவு நீடிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் 17 முறை சந்தித்துள்ளோம். இதுவே நமது உறவின் ஆழத்தை பிரதிபலிக்கிறது. வரும் ஆண்டுகளில் இரு நாடுகளின் உறவுகள் மேலும் வலுவடையும் என்று நம்புகிறேன். உலகம் எரிபொருள் சவாலை எதிர்கொண்டபோது, பெட்ரோல் மற்றும் டீசல் தேவைகளை பூர்த்தி செய்ய ரஷ்யாவின் ஆதரவு எங்களுக்கு உதவியது. எரிபொருள் தொடர்பான இந்தியா-ரஷ்யா இடையேயான ஒப்பந்தம் சர்வதேச சந்தையின் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதில் பெரும் பங்கு வகித்ததை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்த 40-50 ஆண்டுகளாக, இந்தியா தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு, அதை எதிர்த்து போராடி வருகிறது. அனைத்து வகையான தீவிரவாதத்தை நாங்கள் கண்டிக்கிறோம். மாஸ்கோவில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தபோது, அது ஏற்படுத்திய வலியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. தீவிரவாத சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்.

உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது குண்டு வீசப்படுவதால் அப்பாவி குழந்தைகள் பலியாவதும் காயமடைவதும் இதயத்தை உலுக்குகிறது. மிகவும் வேதனை தருகிறது. இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறது.
மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்பதை உறுதியாக நம்புகிறது. நமது அடுத்த தலைமுறையின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அமைதி மிகவும் அவசியம். இதற்கு போர்க்களத்தில் தீர்வு காண்பது சாத்தியமில்லை.

வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்கு மத்தியில் தீர்வுகள் மற்றும் சமாதானப் பேச்சுக்கள் வெற்றியடையாது. பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே சமாதானத்திற்கான பாதையை நாம் பின்பற்ற வேண்டும் என்பதை நல்ல நண்பனாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இதையடுத்து, ரஷ்ய பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி ஆஸ்திரியாவின் வியன்னாவுக்கு புறப்பட்டுச் சென்றார். 40 ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஆஸ்திரியா நாட்டிற்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த சூழலிலும் உதவுகின்ற நம்பகமான நண்பன் ரஷ்யா: உக்ரைன் போர் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்தி வரும் நிலையில், ‘அனைத்து சூழலிலும் உதவும் இந்தியாவின் நம்பகமான நண்பன் ரஷ்யா’ எனவும் அந்நாட்டு அதிபர் புடினையும் பிரதமர் மோடி வெகுவாக பாராட்டி உள்ளார். மாஸ்கோவில் நேற்று இந்திய வம்சாவளிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘ரஷ்யா என்ற வார்த்தையை கேட்டவுடன், ஒவ்வொரு இந்தியனுக்கும் ‘எந்த சூழலிலும் உதவக்கூடிய நண்பன்’, ‘நம்பகமான நட்பு நாடு’ என்பதுதான் நினைவில் வரும். ரஷ்யாவில் குளிர்காலத்தில் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரிக்கு கீழே வெகுவாக சரிந்தாலும், இந்தியா, ரஷ்யா நட்பு எப்போதும் பிளஸ் ஆக இருக்கும். இந்த உறவு பரஸ்பர நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றின் வலுவான அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டாக நமது நட்புறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல உதவியதற்காக நண்பர் புடினுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்’’ என்றார்.

உயரிய விருது வழங்கி கவுரவிப்பு: அதிபர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ரஷ்யாவின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ’ விருதை பிரதமர் மோடிக்கு அதிபர் புடின் வழங்கி கவுரவித்தார். இந்த விருது கடந்த 2019ம் ஆண்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட மோடி, புடினுக்கு இதயபூர்வ நன்றி என்றும், இந்த விருது 140 கோடி இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதை என்றும் நன்றி தெரிவித்தார்.

ஜெலன்ஸ்கி வேதனை: மாஸ்கோவில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புடின் கட்டிப்பிடித்து இரவு விருந்துக்கு வரவேற்றார். இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெனல்ஸ்கி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘உக்ரைனில் இன்று (திங்கட்கிழமை) மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணை ஏவி நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 37 பேர் பலியாகினர். 170 பேர் காயமடைந்தனர். பலர் இடிபாடுகளில் புதைந்துள்ளனர். அதே நாளில், மாஸ்கோவில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகின் மிகக் கொடூரமான குற்றவாளியை கட்டிப்பிடித்ததைப் பார்ப்பது, அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றம் மற்றும் பேரழிவு தரும் அடியாகும்’’ என கூறி உள்ளார்.

2 புதிய துணை தூதரகங்கள்: மாஸ்கோவில் இந்திய வம்சாவளிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத்தையும் வர்த்தகத்தையும் மேம்படுத்துவதற்காக ரஷ்யாவில் 2 புதிய துணை தூதரகங்களை இந்தியா திறக்கும்’’ என்று அவர் அறிவித்தார்.

The post ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள் விரைவில் விடுவிப்பு: பிரதமர் மோடியிடம் அதிபர் புடின் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: