அவரது கதாப்பாத்திரங்கள் இன்றும் தமிழ் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது: நடிகர் சரத்பாபு மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நடிகர் சரத்பாபு மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் சரத்பாபு காலமானார். அவருக்கு வயது 71. முத்து, அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் சரத்பாபுவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஐதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 1973ல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார். சரத்பாபு மறைவுக்கு திரையிலகினரும், அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தென்னிந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வலம் வந்த நடிகர் சரத்பாபு அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து போன்ற ஏராளமான திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் இன்றும் தமிழ் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலகினர். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post அவரது கதாப்பாத்திரங்கள் இன்றும் தமிழ் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது: நடிகர் சரத்பாபு மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: