ரேஷனில் எடை குறைவு புகாரா? வருகிறது வை பை மூலம் தீர்வு

தமிழ்நாட்டில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த குடும்பத்தினருக்கு கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்றவை குறைந்த விலையில் விற்கப்படுகிறது. மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின் சிறப்பு திட்டங்களின் கீழ் உதவித்தொகை, பொங்கல் தொகுப்பு, வேட்டி-சேலை போன்றவையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யும் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவற்றின் எடை அளவு மிகவும் குறைவாக உள்ளதாக, நுகர்வோர்களிடமிருந்து புகார்கள் வருகிறது. இதனால் ரேஷன் கடைகளில் பொருட்களின் எடை குறைப்பை தடுக்கும் வகையில் புதிய நடைமுறையை அமலப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பயோ மெட்ரிக் கருவியுடன், மின்னணு எடை தராசை இணைத்து, சரியான அளவில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொதுவினியோக திட்ட அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு ஆகியவற்றின் எடை குறைவாக இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வருகிறது. இதுகுறித்து அடிக்கடி ஆய்வு நடத்தி முறைகேட்டில் ஈடுபடும் ரேஷன் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களின் ரேஷன் பொருட்களை தனியாக பாக்கெட் செய்து வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது ரேஷன் கடைகளில் உள்ள பயோ மெட்ரிக் கருவியை, வைபை மூலம், எடை அளவிடும் மின்னணு தராசுடன் இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 60 கிலோ எடை அளவிடும் மின்னணு தராசு உள்ள ரேஷன் கடைகளின் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிந்து, இந்த கடைகளில் வைபை மூலம் மின்னணு தராசுகளுடன் பயோமெட்ரிக் கருவிகள் இணைக்கப்படும். பின்னர் மற்ற கடைகளிலும் இந்த நடைமுறையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் மூலம் ரேஷன் கார்டு வைத்துள்ள நபரின் கைரேகை பதிவு செய்தவுடன், அந்த ரேஷன் கார்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசி, சர்க்கரை, கோதுமை ஆகியவற்றின் எடை அளவு தெரியவரும். இதையடுத்து, கடையில் உள்ள பணியாளர்கள் அந்த எடை அளவுக்கான பொருட்களை சரியான அளவில் வழங்க வேண்டும். அந்த எடையை விட குறைவாக பொருட்களை மின்னணு எடை தராசில் இருந்து எடுத்தால், அடுத்து வருபவர்களுக்கு பொருட்களை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் ரேஷன் பொருட்களின் எடை குறைவதாக வரும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இந்த புதிய திட்டம் ரேஷன் கடைகளில் விரைவில் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* கண்விழி சரிபார்ப்பு மூலம் பொருட்கள் விநியோகம்
முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கருவியின் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. ‘சர்வர்’ பிரச்னையால் விரல்ரேகை பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அடிக்கடி புகார் எழுந்தது. இதையடுத்து, ரேஷன் கடை சேவையை மேம்படுத்த, கண் கருவிழி சரிபார்ப்பை உறுதி செய்து பொருட்கள் வழங்க அரசு முடிவு செய்தது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் சோதனை முறையில் கண் கருவிழி சரிபார்ப்பு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post ரேஷனில் எடை குறைவு புகாரா? வருகிறது வை பை மூலம் தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: