கல்லூரி பெண் முதல்வருக்கு பதிவாளர் பாலியல் தொல்லை: ஐஜியிடம் புகார்


மதுரை: மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் கல்வி கல்லூரியில் முதல்வராக பணியாற்றும் பெண் ஒருவர், தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நேற்று புகார் மனு அளித்தார். மனு தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக பதிவாளராக கடந்த ஜனவரி மாதம் ராமகிருஷ்ணன் பொறுப்பேற்றார். அப்போது அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து கல்லூரி முதல்வர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். சில நாட்கள் கழித்து பதிவாளர் ராமகிருஷ்ணன், அவருக்கு அருகே எனது போட்டோ இருப்பதுபோல கிராப் செய்து, தினசரி எனது வாட்ஸ்அப்புக்கு அனுப்பி நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என தொந்தரவு அளித்து வந்தார்.

மேலும் கடந்த மார்ச் மாதம் எங்களது கல்லூரியில் சிபிஏ ஆய்வுக்கான சுற்றறிக்கையை வழங்கிய பதிவாளர், சிபிஏ ஆய்வுக்கான ஆய்வாளரை அனுப்பிவைத்து அவர் மூலமாக ரூ.10 லட்சம் உயர் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும். இந்தப் பணத்தை வழங்கவில்லை என்றால், முதல்வர் பதவியில் இருந்து உங்களை நீக்கும் அளவிற்கு எனக்கு பவர் இருக்கிறது என்று மிரட்டினார். அதற்கு நான் மறுத்த நிலையில் பின்னர் நான் பணிபுரியும் கல்லூரி தாளாளர் மூலம் ரூ.10 லட்சத்தை பெற்றுள்ளார். மார்ச் 19ல் வாட்ஸ்அப் கால் மூலம் பேசி, உங்களை சிண்டிகேட் உறுப்பினராக தேர்வு செய்ய உள்ளோம் எனக்கூறி, அட்ஜஸ்ட் செய்யும்படி கூறி தொந்தரவளித்தார்.

இதன்பேரில் உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளரிடம், பதிவாளர் ராமகிருஷ்ணனின் நடவடிக்கைகள் குறித்து புகார் அளித்தேன். எனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் பதிவாளர் பதவியில் இருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டார். நான் அளித்த பாலியல் தொந்தரவு தொடர்பான புகாரை திரும்பபெற வேண்டும் என கூறி தொடர்ந்து பல்வேறு முறைகளில் மிரட்டல் விடுத்து வருகிறார். மேலும், கல்லூரிகளில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் எனது புகைப்படத்தை பயன்படுத்தி அவதூறான தகவல்களை பதிவிட்டு வருகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்’’ என்றார்.

The post கல்லூரி பெண் முதல்வருக்கு பதிவாளர் பாலியல் தொல்லை: ஐஜியிடம் புகார் appeared first on Dinakaran.

Related Stories: