இந்திய வரலாற்றை தீர்மானிக்கும் தவிர்க்க முடியாத தலைவர் கலைஞர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


கும்பகோணம்: ‘ 75 ஆண்டுகால இந்திய வரலாற்றை தீர்மானிக்கும் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்து இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்தவர் கலைஞர்’ என்று குடந்தையில் நடந்த கலைஞர் சிலை திறப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வலையபேட்டை-மாங்குடியில் மாவட்ட ஊராட்சிக்குழு நிதியில் ரூ66 லட்சத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் , பெண்களுக்கான தையற் பயிற்சியகத்துடன் கூடிய கலைஞர் கோட்டம், அதில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் உருவசிலை திறப்பு விழா அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, கலைஞர் கோட்டம் மற்றும் முதல் தளத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் அமர்ந்து எழுதுவதுபோல் உள்ள வெண்கல சிலை ஆகியவற்றை திறந்து வைத்து பேசியதாவது: கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கலைஞர் உருவ சிலையை திறந்து வைக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

கலைஞர் அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிவாகை சூடியவர். தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் 100 சதவீதம் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 75 ஆண்டுகால கலைஞர் வரலாற்றில் இந்தியாவை தீர்மானிக்கும் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்தவர். அது மட்டுமல்ல, இந்தியாவிற்கே வழிகாட்டியவர். கலைஞர் வழியில் நமது முதல்வர் முக.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை செயல்படுத்தி வருகிறார். இந்தியா இருப்பதற்கு காரணம் நமது தலைவர்கள் உருவாக்கிய இந்தியா கூட்டணி தான்‌‌. இந்தியா கூட்டணி தான் பாசிஸ்டுகளுக்கு கடிவாளம் போட்டுள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக ஆட்சியில் அமர செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் கலைஞர் கோட்டம் அருகே மாங்குடியில் மூத்த முன்னோடியான மொழிப்போர் தியாகி வீ.ரத்தினத்தின் சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து கும்பகோணம் மாநகராட்சி மூர்த்தி கலையரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 1,361 ஊராட்சிகளுக்கு 1651 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யமொழி, மெய்யநாதன், எம்.பி கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சை மேயர் சண்.ராமநாதன், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், மயிலாடுதுறை திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மணல்மேட்டில் உள்ள கலைஞர் படிப்பக வளாகத்தில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 8 ¼ அடி உயரத்தில் கலைஞரின் வெண்கல உருவ சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

The post இந்திய வரலாற்றை தீர்மானிக்கும் தவிர்க்க முடியாத தலைவர் கலைஞர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: