திருப்பூரில் ரப்பர் தட்டுப்பாடு; எலாஸ்டிக் விலை 10% உயருகிறது: பனியன் உற்பத்தியாளர்கள் கவலை

திருப்பூர்: ரப்பர் தட்டுப்பாட்டின் காரணமாக திருப்பூரில் எலாஸ்டிக்கின் விலை 10 சதவீதம் உயருகிறது. திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். திருப்பூரில் ஆண்டு முழுவதும் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட ஆடை தயாரிப்பு மற்றும் ஆடைகளில் முக்கிய பங்கு வகிப்பது எலாஸ்டிக். ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் மற்றும் ‘டி’ சர்ட்டுகளில் எலாஸ்டிக்கின் பங்கு இன்றிமையாதது. திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் எலாஸ்டிக் உற்பத்தி செய்கிற நிறுவனங்கள் 300க்கும் மேற்பட்டவை உள்ளன.

இதன் முலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள். அவர்களின் குடும்பமும் வாழ்வாதாரம் பெற்று வருகிறது. எலாஸ்டிக் உற்பத்திக்கு பாலியஸ்டர் நூல் மற்றும் ரப்பர் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. பாலியஸ்டர் நூல் வட மாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டு வருகிறது. கேரளா மற்றும் அசாம், மலேசியா, தாய்லாந்து ஆகிய பகுதிகளில் இருந்து ரப்பர் வாங்கி வருகின்றனர். அதை வைத்து திருப்பூரில் எலாஸ்டிக்கை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இதுபோல் செயற்கை நூலிழையும் எலாஸ்டிக் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெட்ரோலிய மூலப்பொருட்களை கொண்டு பாலியஸ்டர் நூல் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதன் விலைகளில் ஏற்படுகிற ஏற்ற இறக்கம் காரணமாக எலாஸ்டிக் துறை அவ்வப்போது பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது.

இயற்கை சீற்றங்களான மழை உள்ளிட்ட பாதிப்புகள் காரணமாக ரப்பர் கொள்முதல் செய்கிறபோது அதன் விலை திடீரென உயரும். இந்நிலையில், ரப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ரப்பர் விலை உயர்ந்துள்ளது. இதனால், எலாஸ்டிக் விலையை 10 சதவீதம் வரை உயர்த்த எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கோவிந்தசாமி கூறியதாவது: எலாஸ்டிக் உற்பத்திக்கு மிக முக்கிய மூலப்பொருளான ரப்பர் கேரளாவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்து வருகிறோம். தற்போது, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்பின் காரணமாக ரப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ரப்பர் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரப்பர் ரூ.230ல் இருந்து ரூ.285 வரை கடந்த வாரம் உயர்ந்தது.

இதனால், கடும் சிரமத்தை சந்தித்தோம். தற்போது சற்று விலை குறைந்து ரூ.250க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வினால் எலாஸ்டிக் விலையை 10 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளோம். விலையை உயர்த்தவில்லை என்றால் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, பனியன் உற்பத்தியாளர்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருப்பூரில் ரப்பர் தட்டுப்பாடு; எலாஸ்டிக் விலை 10% உயருகிறது: பனியன் உற்பத்தியாளர்கள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: