விற்பனையாகாததால் ஆலைகளில் தேக்கம்: சாத்தூர் தீப்பெட்டியை ‘எரித்த’ சீனாவின் சிகரெட் லைட்டர்கள்

* ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு
* ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமா?

சாத்தூர்: சீன லைட்டர்களின் வருகையால் விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி தொழில் பெரும் நஷ்டம் அடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலுக்கு முன்பு மக்களின் வாழ்வாதாரமாக தீப்பெட்டி தொழில் இருந்து வந்தது. கிராமத்தில் குறைந்தபட்சம் பத்துக்கும் மேற்பட்ட சிறிய தீப்பெட்டி ஆலைகள், நகரங்களில் பெரிய தொழிற்சாலைகள் இருந்து வந்தன. விருதுநகர், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி போன்ற பகுதிகளில் இன்றும் பல குடும்பங்களுக்கு தீப்பெட்டி தொழில்தான் வாழ்வாதாரமாக உள்ளது. தீப்பெட்டியின் பயன்பாடு நன்றாக இருந்த காலகட்டத்தில் தொழில் கொடிகட்டி பறந்தது.

ஆரம்பத்தில் குடிசைத் தொழிலாக இருந்த தீப்பெட்டி தொழில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செமி இயந்திரம் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு சென்றது. ஆனால் இதன்பிறகு சாத்தூர், சிவகாசி பகுதிகளில் பட்டாசு ஆலைகளின் எண்ணிக்கை அதிகமானது. அங்கு கூலி அதிகமாக கிடைத்ததால் தீப்பெட்டி தொழிலாளர்கள் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றனர். அதனால் தீப்பெட்டி ஆலைக்கு செல்லும் தொழிலாளர்கள் வெகுவாக குறைந்தனர். இந்த நிலையை சமாளிக்க தீப்பெட்டி ஆலைகளில் முழு ஆட்டோமேட்டிக் இயந்திரங்களை பொருத்தி உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் மூலம் அதிகளவு தீப்பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டன.

ஆனால் உற்பத்தி செய்த பெரும்பாலான தீப்பெட்டிகள் ஆலைகளிலேயே தேங்கி கிடக்கின்றன. காரணம், சீன லைட்டர்களின் வருகைதான். சீன லைட்டர்கள் மலிவான விலையில் கிடைப்பதால் பொதுமக்கள் இதனை வாங்குவதையே பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தீப்பெட்டி ஆலைகள் பெரும் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே தீப்பெட்டி தொழிலை பாதுகாக்கும் வகையில் சீன லைட்டர்களின் வருகையை தடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும் சீன லைட்டர்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த கடைகளில் அதிரடி சோதனை, பறிமுதல், அபராதம் என அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது.

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘‘ஒரு காலத்தில் 24 மணி நேரமும் இயங்கி வந்த தீப்பெட்டி ஆலைகள் இன்று வாரத்தில் 3 நாட்கள் கூட இயங்குவது சந்தேகமாக உள்ளது. வாங்கிய கடனை கட்ட முடியாமலும், ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமலும் பல ஆலைகளின் உரிமையாளர்கள் ஆலைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதையே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தீபாவளியை கொண்டாட போனஸ் கூட கிடைக்காதோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே ஒன்றிய அரசு சீன லைட்டர்கள் நுழைவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்’’ என தெரிவித்தனர்.

The post விற்பனையாகாததால் ஆலைகளில் தேக்கம்: சாத்தூர் தீப்பெட்டியை ‘எரித்த’ சீனாவின் சிகரெட் லைட்டர்கள் appeared first on Dinakaran.

Related Stories: