ராணிப்பேட்டை மாவட்டத்தில் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமை தொகை விடுபடாமல் வழங்க வேண்டும்

*அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் நியாய விலைக் கடையில் வரையறுக்கப்பட்ட தகுதியுடைய தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விடுபடாமல் வழங்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் வழங்கும் பணிகளை மேற்கொள்ள உள்ள நியாய விலைக் கடை விற்பனையாளர்களுக்கான கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் முழு ஈடுபாடுடன் பணியாற்ற வேண்டும். விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்களை தாங்கள் பணிபுரியும் நியாய விலைக் கடையில் வரையறுக்கப்பட்ட தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விடுபடாமல் வழங்க வேண்டும். விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை வழங்கும் பணிகளில் ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால் அதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது தொடர்புடைய உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் உடனடியாக தகவல் தெரிவித்து தீர்வு காண வேண்டும்.

ஏற்கனவே, தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகளை விற்பனையாளர்களாகிய நீங்கள் சிறப்பாக மேற்கொண்ட காரணத்தால் மகளிர் உரிமைத்துறை வழங்கும் பணிகளையும் தாங்கள் மூலமாக மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணிகளை பகுதி வாரியாக எந்த ஒரு தகுதியுள்ள குடும்ப அட்டைதாரரும் விடுபடாத வகையில் பயோமெட்ரிக் முறையில் விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகம் செய்யும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் டிஆர்ஓ சுரேஷ், கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொது) முரளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்யபிரசாத், கூட்டுறவு சங்கங்கள் துணை பதிவாளர் சந்திரன் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர்.

The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமை தொகை விடுபடாமல் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: