ராமேஸ்வரம், கொடைக்கானலில் ஹெலிகாப்டர் இறங்குதளம்: அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் மானிய கோரிக்கையின் போது சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் பதிலளித்து பேசியதாவது: தமிழ்நாடு நாட்டிலேயே முதன்மை சுற்றுலா தலமாக விளங்குகிறது. தமிழ்நாடு மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் 38 சுற்றுலா அலுவலகங்கள், 22 சுற்றுலா தகவல் மையங்கள் உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, சீனா, மலேசியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் பயணிகள் பெருமளவில் நம் நாட்டிற்கு வந்துள்ளனர். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமான மாமல்லபுர நினைவுச் சின்னங்கள் 1,44,984 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் பார்வையிடப்பட்டு, வருகையில் முதலிடம் வகிக்கின்றன. தாஜ்மஹாலை 38,922 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு, 2ம் இடத்தில் உள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் 10 பிரபலமான பாரம்பரிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில், திருமயம் கோட்டை அருங்காட்சியகம், வட்டக்கோட்டை, செஞ்சி கோட்டை, சித்தன்னவாசல் குடைவரை ஜெயின் கோயில், சாலுவன்குப்பம் புலிக்குகை கோயில் உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. 2021ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11.65 கோடியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12.30 லட்சமாகும். 2022ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 21.89 கோடியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4.7 லட்சமாகும்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2021ம் ஆண்டைக் காட்டிலும் 2022ம் ஆண்டில் 10.23 கோடி சுற்றுலாப் பயணிகள் கூடுதலாக தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஆன்மீக மற்றும் கலாச்சார சுற்றுச்சூழல் பூங்கா, ராமேஸ்வரம் மற்றும் கொடைக்கானல் ஹெலிகாப்டர் இறங்குதளம் ஆகியவற்றிற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.46.9593 கோடி ஒப்பளிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.

The post ராமேஸ்வரம், கொடைக்கானலில் ஹெலிகாப்டர் இறங்குதளம்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: