அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளில் ஆய்வு செய்ய 30 பேர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம்: பள்ளி கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

சென்னை: அனைத்து மாவட்டங்களின் பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் என 30 பேர் கண்காணிப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் பம்மதுகுளம் அரசுப் பள்ளியில் மாணவர் வருகைப் பதிவேட்டில் முறைகேடு நடந்ததாக அதன் தலைமையாசிரியர் மற்றும் அதை கண்காணிக்காத வட்டார கல்வி அலுவலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.  விழுப்புரம் கோலியனூர் அருகே அரசு உதவிப்பெறும் பள்ளியிலும் மாணவர்கள் எண்ணிக்கையில் இருந்த குளறுபடியால் அதன் வட்டாரக் கல்வி அலுவலரும், செங்கல்பட்டு முள்ளிப்பாக்கம் அரசுப் பள்ளியில் முறையான தகவல் இன்றி நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்த ஆசிரியரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் 38 மாவட்டங்களிலும், பள்ளிகளில் ஆய்வு செய்ய இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் என 30 பேர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள், பள்ளிகளில் ஆய்வு பணிகளை செய்ய வேண்டும். அந்தவகையில் தமிழக பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் சங்கர் (புதுக்கோட்டை), ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி (செங்கல்பட்டு), பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் (மதுரை), தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் (திருவள்ளூர்), தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி (சென்னை) உள்பட 30 அதிகாரிகள் தங்களுக்கான மாவட்டத்தில் ஆய்வுகள் செய்ய வேண்டும்.

மாதம் ஒருமுறை பள்ளிகளில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை 5ம் தேதிக்குள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம் போன்ற நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் வருகை விவரங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் கண்காணிக்க வேண்டும். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் செயல்பாடுகள், ஆசிரியர்கள், பணியாளர்களின் காலிப்பணியிட விவரங்கள் குறித்து கேட்டறிய வேண்டும். இதுதவிர முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலகங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அங்கு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் அங்கீகாரம், கல்வி உபகரணங்களின் இருப்பு, தணிக்கை விவரங்களையும் ஆராய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளில் ஆய்வு செய்ய 30 பேர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம்: பள்ளி கல்வித்துறை இயக்குநர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: