தனியார் நிறுவனத்திற்கு தர வேண்டிய ரூ.1.96 கோடி விவகாரம்: குஜராத் அரசுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை: சென்னை ஐகோர்ட் அமர்வு உத்தரவு

சென்னை: குஜராத் மாநிலத்தில் அரசு ஆரம்பப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி வழங்குவது தொடர்பாக, எவர் ஆன் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேகொள்ளப்பட்டது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த நிதி நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், எவர் ஆன் நிறுவனத்தின் சொத்துகளை நிர்வகிக்க சென்னை உயர் நீதிமன்ற ஒரு அதிகாரியை நியமித்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரி, எவர் ஆன் நிறுவனத்துக்கு குஜராத் அரசு வழங்க வேண்டிய தொகை குறித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருந்தார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில், எவர் ஆன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய ஒரு கோடியே 96 லட்சம் ரூபாயை 2017ம் ஆண்டு முதல் 9 சதவீத வட்டியுடன் உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரிடம் செலுத்துமாறு குஜராத் மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் மாநில தலைமைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குஜராத் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கம்ப்யூட்டர் கல்வித் திட்டம் வெற்றிகரமாக முடித்துள்ளதா என்று திருப்தியடையாமல், திட்டத்துக்கான தொகையை வழங்கும்படி வற்புறுத்த முடியாது. உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதால் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஒரு கோடியே 96 லட்சம் ரூபாயை உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரியிடம் செலுத்துமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

The post தனியார் நிறுவனத்திற்கு தர வேண்டிய ரூ.1.96 கோடி விவகாரம்: குஜராத் அரசுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை: சென்னை ஐகோர்ட் அமர்வு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: