மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடக்கிறது: ராகுல்காந்தி யாத்திரை இன்று தொடக்கம்

மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடக்கிறது: ராகுல்காந்தி யாத்திரை இன்று தொடக்கம்
இம்பால்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் இன்று பாரத் நீதி யாத்திரை மணிப்பூரில் இருந்து தொடங்குகின்றது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 2022ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ என்ற பெயரில் நடைபயணத்தை தொடங்கினார்.12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 75 மாவட்டங்கள், 76 மக்களவை தொகுதிகள் வழியாக இந்த நடைபயணத்தை ராகுல்காந்தி மேற்கொண்டார். இந்நிலையில் பாரத் ஜோடோ நீதி யாத்திரையை ராகுல்காந்தி இன்று தொடங்குகின்றார். பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வன்முறை வெடித்த மணிப்பூரின் தவுபாலில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்த பாரத் நீதி யாத்திரையை தொடங்குகின்றார்.

15 மாநிலங்களில் உள்ள 110 மாவட்டங்கள், 100 மக்களவை தொகுதிகள், 337 சட்டமன்ற தொகுதிகளின் வழியாக 67 நாட்களுக்கு இந்த யாத்திரை நடைபெறும். சுமார் 6713 கி.மீ. தூரத்துக்கு யாத்திரை நடைபெறுகிறது. இந்த யாத்திரை பெரும்பாலும் பேருந்து மூலமாக மேற்கொள்ளப்படும். நடைபயணமாகவும் மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரையானது மார்ச் 20 அல்லது 21ம் தேதி மும்பையில் நிறைவடையும். மக்கள் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கு அரசு வாய்ப்பு வழங்காததால், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்தவம் ஆகிய கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டும் நோக்கத்தில் பாரத் நீதி யாத்திரையை மேற்கொள்வதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மேலும் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆட்சியின்போது இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவதற்காக பாரத் ஜோடோ நீதி யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. துன்பப்பட வேண்டாம், பயப்பட வேண்டாம் என்ற வரிகளோடு நீதி யாத்திரை கீதம் அனைத்து சமூக வலைதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

The post மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடக்கிறது: ராகுல்காந்தி யாத்திரை இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: