உயர் நீதிமன்றங்களில் 30 ஆண்டாக நிலுவையில் இருக்கும் 62,000 வழக்குகள்: சென்னை ஐகோர்ட்டில் 72 ஆண்டு நிலுவை வழக்கு

புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 62 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் சமீபத்தில் நடந்த மாவட்ட நீதித்துறை தேசிய மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, ‘‘நீதித்துறையில் ஒத்திவைப்பு கலாச்சாரம் மாற வேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் நீதித்துறை முன்பாக பெரும் சவாலாக உள்ளன’’ என்றார். அதே மாநாட்டில் பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், 5 முதல் 30 ஆண்டுகள் வரை நிலுவையில் உள்ள வழக்குகள் பல இருப்பதாகவும், அவற்றில் 30 சதவீத வழக்குகள் ஒரு தடவையில் முடிக்கக் கூடியவை என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தேசிய நீதித்துறை தரவுகளின்படி, நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 42.64 லட்சம் சிவில் வழக்குகளும், 15.94 லட்சம் குற்றவியல் வழக்குகளும் உட்பட 58.59 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில், 30 ஆண்டுக்கு மேலாக 62 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 20 முதல் 30 ஆண்டுகள் பழமையான வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 2.45 லட்சம். 1952ம் ஆண்டு முதல் 72 ஆண்டாக தீர்வுக்காக 3 வழக்குகள் காத்திருக்கின்றன. இவற்றில் 2 வழக்குகள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலும், ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. 1954 முதல் 4 வழக்குகளும், 1955 முதல் 9 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மாவட்ட நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் என ஒட்டுமொத்தமாக சுமார் 5 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post உயர் நீதிமன்றங்களில் 30 ஆண்டாக நிலுவையில் இருக்கும் 62,000 வழக்குகள்: சென்னை ஐகோர்ட்டில் 72 ஆண்டு நிலுவை வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: