நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அன்பின் குரல் ஒலிப்பதை உறுதி செய்வதே நோக்கம்: இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2ம் ஆண்டு நிறைவில் ராகுல் டிவிட்


புதுடெல்லி: ‘நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அன்பின் குரல் ஒலிப்பதை உறுதி செய்வதே எங்கள் பணி’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2ம் ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்தார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, கடந்த 2022, செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். இதில், 145 நாட்கள் பல்வேறு மாநிலங்களை கடந்து காஷ்மீரில் 2023 ஜனவரி 30ம் தேதி நடைபயணத்தை நிறைவு செய்தார். இந்நிலையில், இந்திய ஒற்றுமை பயணத்தின் 2ம் ஆண்டு நிறைவையொட்டி ராகுல் நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
இந்திய ஒற்றுமை நடைபயணம் எனக்கு மவுனத்தின் அழகை கற்றுத் தந்தது.

ஆரவாரமான கூட்டங்கள், கோஷங்களுக்கு மத்தியில், சத்தத்தைத் தணித்து, என் அருகில் இருப்பவர்கள் மீது முழு கவனம் செலுத்தக்கூடிய, உண்மையாக கேட்கும் ஆற்றலைக் கண்டுபிடித்தேன். அந்த 145 நாட்கள் மூலம், பல்வேறு பின்னணியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களின் பேச்சைக் கேட்டேன். இந்தியர்கள் இயல்பாகவே அன்புள்ள மக்கள் என்பதை இந்த யாத்திரை நிரூபித்துள்ளது. நான் இந்த பயணத்தை தொடங்கியபோது, அன்பு வெறுப்பை வெல்லும், நம்பிக்கை பயத்தை வெல்லும் என்று சொன்னேன். இன்றும் நமது நோக்கம் அப்படியே உள்ளது. பாரத அன்னையின் குரலை உறுதி செய்ய, அன்பின் குரல் நம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒலிக்கச் செய்வதே நமது நோக்கம். இவ்வாறு ராகுல் கூறி உள்ளார்.

The post நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அன்பின் குரல் ஒலிப்பதை உறுதி செய்வதே நோக்கம்: இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2ம் ஆண்டு நிறைவில் ராகுல் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: