மணிப்பூரில் மீண்டும் வன்முறை; துப்பாக்கி சண்டையில் 5 பேர் பலி: தீவிரவாதிகளின் 3 பதுங்கு குழி அழிப்பு


இம்பால்: மணிப்பூரில் ஜிரிபாம் மாவட்டத்தில் இரு சமூகத்தினர் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 5 பேர் பலியாகினர். சுராசந்த்பூரில் தீவிரவாதிகளின் 3 பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் அழித்துள்ளனர். மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் இனக்கலவரமாக வெடித்து ஒன்றரை ஆண்டாக பதற்றமான சூழல் நீடிக்கிறது. இதுவரை 200 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக மக்களையும், பாதுகாப்பு படையினரையும் குறிவைத்து டிரோன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் தீவிரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இங்கு ஒதுக்குப்புறமான பகுதியில் தனியாக வசித்து வந்த நபர் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு சமூகத்தினர் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மலை பகுதியை சேர்ந்த போராளிகள் 3 பேர் உட்பட 4 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள முல்சங், லைக்கா, முல்சவ் கிராமங்களில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு தீவிரவாதிகளின் 3 பதுங்கு குழிகளை அழித்தனர்.

முன்னதாக பிஷ்ணுபூரில் முன்னாள் முதல்வரின் வீட்டின் மீது தீவிரவாதிகள் நடத்த டிரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

டிரோன் தாக்குதல்: வீட்டு விளக்குகளை அணைத்து பதுங்கும் பொது மக்கள்
மணிப்பூரில் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளது. இம்பால் மேற்கு மாவட்டம் பகுதியில் 2 முறை டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பிஷ்ணுபூர் மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களின் புறப் பகுதிகளில் உள்ள மக்கள் இரவு பகுதியில் பல டிரோன்களைக் கண்டதைத் தொடர்ந்து தங்கள் வீட்டு விளக்குகளை அணைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் இரவு பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நரேன்சேனா, நம்போல் கமோங் மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள புகாவ், டோலைதாபி, சாந்திபூர் ஆகிய இடங்களில் பல டிரோன்கள் காணப்பட்டதால் பீதியடைந்த கிராம மக்கள் வீட்டில் மின்விளக்குகளை அணைத்து பதுங்கினர். இது பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனை: ஆளுநரை சந்தித்தார் முதல்வர் பிரேன் சிங்
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக கலவரம் அடங்கியிருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மீண்டும் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஒருபுறம் தீவிரவாதிகள் எப்போதும் இல்லாத வகையில் டிரோன் மூலம் அதிநவீன முறையில் தாக்குதல் நடத்துகின்றனர். கடந்த 5 நாட்களில் நடந்த வன்முறையில் 7 பேர் பலியாகி உள்ளனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் தலைநகர் இம்பால் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசிப்பதற்காக அம்மாநில முதல்வர் பிரேன் சிங், கூட்டணி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் அவசர கூட்டத்தை நேற்று நடத்தினார். 25 எம்எல்ஏக்கள் பங்கேற்ற அக்கூட்டத்தில் ஆயுதமேந்திய கும்பல்களின் தொடர் தாக்குதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஆளுநர் ஆச்சார்யாவையும் முதல்வர் பிரேன் சிங் சந்தித்து பேசினார். இதுதொடர்பாக எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

The post மணிப்பூரில் மீண்டும் வன்முறை; துப்பாக்கி சண்டையில் 5 பேர் பலி: தீவிரவாதிகளின் 3 பதுங்கு குழி அழிப்பு appeared first on Dinakaran.

Related Stories: