மக்களவை தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கடைசி உரை: காங்கிரஸ் மீது கடும் தாக்கு

புதுடெல்லி: மாநிலங்களவையில் காங்கிரசை பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசினார்.மாநிலங்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நேற்று பதிலளித்து பேசினார். மக்களவை தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் தனது கடைசி உரையில் மோடி கூறியதாவது:பாஜ அரசின் 3வது பதவிக்காலம் வெகு தொலைவில் இல்லை. சிலர் அதை மோடி 3.0 என்று அழைக்கிறார்கள். இதில், வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்த எங்கள் முழு பலத்தையும் செலவிடுவோம். இதற்காக அடுத்த 5 ஆண்டுகள் லட்சிய செயல்திட்டத்தை உருவாக்குவோம். இது மோடியின் உத்தரவாதம்.

காங்கிரசின் செயல்களால் அக்கட்சி மீது மக்கள் கோபம் கொண்டுள்ளனர். அதனால்தான் மக்களவையில் அவர்களின் பலம் குறைந்து வருகிறது. காங்கிரஸ் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரானது. அம்பேத்கர் மட்டும் இல்லாவிட்டால், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு கிடைத்திருக்காது. நாட்டின் முதல் பிரதமரான நேரு இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருந்தார். ஓபிசிக்கு ஒருபோதும் முழுமையான இடஒதுக்கீடு வழங்காத, பொதுப் பிரிவினரின் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்காத, தகுதியான அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்காத காங்கிரஸ், தனது குடும்பத்துக்கு மட்டுமே பாரத ரத்னா விருதை வழங்கிக் கொண்டது.

ஆங்கிலேய அடிமைத்தன மனப்பான்மையிலேயே காங்கிரஸ் இருக்கிறது.இப்போது, வடக்கு, தெற்கு என நாட்டை பிளவுபடுத்த புதிய கதைகளை உருவாக்கி வருகிறது. இந்த தேசம் நமக்கு வெறும் நிலம் மட்டுமல்ல, மனித உடலைப் போன்றது. ஒரு உறுப்பு வேலை செய்யாவிட்டாலும், முழு உடலும் ஊனமாகும். சிந்தித்து செயல்படுவதில் காங்கிரஸ் காலாவதியாகி விட்டது. அதன் உத்தரவாதங்கள் காலாவதியாகி விட்டன. இதனால் அந்த வேலையை இப்போது வெளியில் கொடுத்து அவுட்சோர்சிங் செய்கிறது. அக்கட்சியின் யுவராஜை ’ஸ்டார்ட் அப்’ செய்ய காங்கிரஸ் முயற்சிக்கிறது. ஆனால் அவர் ஸ்டார்ட் ஆகாமலேயே இருக்கிறார்.

காங்கிரசின் இத்தகைய வீழ்ச்சியால் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. எங்கள் அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம். அவர்கள் 40 இடங்களிலாவது வெல்ல வேண்டுமென பிரார்த்திக்கிறோம்.
காங்கிரசின் ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் மிகவும் பொறுமையுடனும் பணிவுடனும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று கூட அவர்கள் எங்கள் குரலை கேட்கத் தயாராக இல்லை. ஆனால், எனது குரலை உங்களால் அடக்க முடியாது. இந்த குரலுக்கு நாட்டு மக்கள் பலம் கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

The post மக்களவை தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கடைசி உரை: காங்கிரஸ் மீது கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: