மே 8ல் பிளஸ் 2 தேர்வு ரிசல்ட்: தேர்வுத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 8ம் தேதி காலை வெளியாகும் என்று தமிழக அரசின் தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை 7,600 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவியர் எழுதினர். தேர்வுகள் ஏப்ரல் 3ம் தேதி முடிந்த பிறகு 10ம் தேதியில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணி 70 மையங்களில் நடந்தது. விடைத்தாளுக்கு தற்போது டம்மி எண்கள் நீக்கி உரிய பதிவு எண்கள் போடும் பணி நடந்து வருகிறது.

அதன் பிறகு, மதிப்பெண் பட்டியல்கள் தயார் செய்யப்படும். இந்நிலையில், தேர்வு முடிவுகளை மே 5ம் தேதி வெளியிட, தேர்வுத் துறை முடிவு செய்திருந்த நிலையில், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் குறிப்பிட்ட தேதியில் முடியாது என்பதால் மே 7ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், மே 7ம் தேதி அன்று ஒன்றிய அரசு நடத்தும் நீட் தேர்வு நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக பிளஸ்2 தேர்வு முடிவை வெளியிடுவது மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டடது. இந்நிலையில், முதல்வரிடம் கலந்து பேசி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை பின்னர் அறிவிப்போம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தேர்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மே 8ம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார். இதையடுத்து மாணவ மாணவியர் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.gov..in ஆகிய இணைய தள முகவரியில் இருந்து தெரிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களை பொறுத்தவரையில் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண் பட்டியல்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், அவர்கள் கொடுத்துள்ள செல்போன் எண்களுக்கும், தனித் தேர்வர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பத்தில் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகளின் எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மே 8ல் பிளஸ் 2 தேர்வு ரிசல்ட்: தேர்வுத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: