மனிதர்களை மையப்படுத்திய இந்தியாவின் ஜி20 தலைமை: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ஜி20 அமைப்பில் இந்தியாவின் தலைமை, மனிதர்களை மையப்படுத்திய காலகட்டமாக இருந்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைமையில் ஜி20 அமைப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘வசுதைவ குடும்பகம்’ – இந்த இரண்டு சொற்கள் ஆழமான தத்துவத்தைக் கொண்டுள்ளன. இதன் பொருள் ‘உலகம் ஒரே குடும்பம்’ என்பதாகும். அனைவரையும் அரவணைக்கும் கண்ணோட்டத்தைக் கொண்ட இது, எல்லைகளை, மொழிகளை, கோட்பாடுகளைக் கடந்து ஒரே பிரபஞ்சக் குடும்பம் என்ற நிலைக்கு நம்மை ஊக்கப்படுத்துகிறது. இந்தியாவின் ஜி20 தலைமைத்துவ காலத்தில், இது மனிதர்களை மையப்படுத்திய முன்னேற்றம் என்ற அழைப்பாக மாறியுள்ளது.

பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலக ஒழுங்கு அதற்கு முந்தைய உலகத்தில் இருந்து மிகவும் மாறுபட்டதாக உள்ளது. மற்றவற்றுக்கு இடையே மூன்று முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாவதாக, உள்நாட்டு மொத்த உற்பத்தி- ஜிடிபி-யை மையப்படுத்திய உலகின் கண்ணோட்டம் என்பதிலிருந்து மாறி மனிதர்களை மையப்படுத்திய கண்ணோட்டமாக இருப்பது அவசியம் என்ற உணர்வு அதிகரித்து வருகிறது. இரண்டாவதாக, உலகளாவிய விநியோகத் தொடரில் உறுதித்தன்மையும், நம்பகத்தன்மையும் முக்கியம் என்பதை உலகம் அங்கீகரித்துள்ளது. மூன்றாவதாக, உலகளாவிய அமைப்புகளின் சீர்திருத்தத்தின் மூலம் பன்முகத்தன்மையை அதிகரிப்பதற்கு கூட்டான அழைப்பு விடுக்கப்படுகிறது.

இந்த மாற்றங்களில் நமது ஜி20 தலைமைத்துவம் வினையூக்கியாக செயல்படுகிறது. 125 நாடுகளின் பங்கேற்புடன் நடைபெற்ற வளரும் நாடுகளின் குரல் என்பது நமது தலைமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான முன்முயற்சிகளில் ஒன்றாக இருந்தது. மேலும் முன் எப்போதும் இல்லாத வகையில், ஆப்பிரிக்கா நாடுகளின் பங்கேற்பு இருந்தது என்பதை நமது தலைமைத்துவம் பார்த்தது மட்டுமின்றி, ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி20-ன் நிரந்தர உறுப்பினராக இணைப்பதற்கும் உந்துதலை ஏற்படுத்தியது.

நமது ஜி20 தலைமைத்துவம் பாகுபாடுகளை இணைக்கவும், தடைகளை உடைக்கவும் பாடுபட்டுள்ளது. முரண்பாடுகளை நீக்கி ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில், ஒத்துழைப்புக்கான விதைகளை நாம் விதைத்துள்ளோம். அனைவரின் குரல் கேட்பதையும் அனைத்து நாடுகளும் பங்களிப்பு செய்வதையும் உறுதிப்படுத்த ஜி20 தலைமைத்துவம் என்ற முறையில் உலகளாவிய பங்கேற்பை அதிகப்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம். செயல்கள் மற்றும் விளைவுகள் வழியாக நமது உறுதிமொழியை நாம் இணைத்திருப்பதாக நான் நம்புகிறேன். இவ்வாறு கூறி உள்ளார்.

நாட்டின் வளமான கலாசாரத்தை பிரதிபலிக்கும் நடராஜர் சிலை: மோடி பெருமிதம்
டெல்லியில் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி- 20 உச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் வரஉள்ளதால் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தின் முகப்பில் 28 அடி உயர நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது காண்போரை மிகவும் கவர்ந்துள்ளது. 18 டன் எடையுடைய இந்த சிலை 8 வகை உலோகங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சுவாமிமலையை சேர்ந்த சிற்ப கலைஞர் ராதாகிருஷ்ணன் ஸ்தபதி தலைமையிலான சிற்ப கலைஞர்கள் 7 மாதங்களில் சிலையை வடிவமைத்து சாதனை புரிந்துள்ளனர். அண்ட ஆற்றல்,கலை திறன் மற்றும் சக்தியை குறிக்கும் நடராஜர் சிலை மாநாட்டின் முக்கிய அம்சமாக அமையும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிடுகையில்,பாரத் மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலை பழங்கால இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் கலாசாரங்களை உயிர்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

The post மனிதர்களை மையப்படுத்திய இந்தியாவின் ஜி20 தலைமை: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: