பட்டாபிராம் ரயில் நிலையத்தில் நீண்டகாலமாக தேங்கியிருக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: சுரங்கப்பாதையை விரைந்து அமைக்க கோரிக்கை

திருவள்ளூர்: ஆவடியை அடுத்த பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையத்தில் குடிநீர், நிழற்குடை போன்ற எந்த அத்தியாவசிய வசதிகளும் இல்லாததால் பயணிகளும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சுகாதார சீர்கேட்டை உடனடியாக சரிசெய்ய ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் வழித்தடத்தில் ஆவடிக்கு அருகே அமைந்துள்ளது பட்டாபிராம் ரயில் நிலையம்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பட்டாபிராம் ரயில் நிலையம் மற்றும் பட்டாபிராம் சைடிங் ரயில் நிலையம் இரண்டுக்கும் இடையே நீண்டகாலமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருவதால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பயணிகள் மட்டுமின்றி அருகில் வசிக்கும் பொதுமக்களும் தொற்றுநோய் அபாயத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இது மட்டுமின்றி சுகாதாரமான குடிநீர், வெயில் காலங்களில் நிழற்குடை போன்ற எந்த வசதிகளும் இன்றி பயணிகள் தினமும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். நீண்டகால கோரிக்கையாக உள்ள சுங்கப்பாதை அமைப்பது உள்ளிட்டவற்றையும் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆவடியில் மாநகராட்சியாக தரம் உயர்த்திய பின் பட்டாபிராம் வழித்தடத்தில் ரயிலில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அவர்களின் நலனை கருத்தில் கொண்டு பட்டாபிராம் ரயில் நிலையத்தில் போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பட்டாபிராம் ரயில் நிலையத்தில் நீண்டகாலமாக தேங்கியிருக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: சுரங்கப்பாதையை விரைந்து அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: