பாட்னாவில் 23ம் தேதி நடக்கும் எதிர்கட்சிகள் கூட்டத்தை பிஆர்எஸ் புறக்கணிப்பு?

பாட்னா: ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான ஒருமித்த கருத்துடைய எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் வரும் 23ம் தேதி பாட்னாவில் நடக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் தலைமை வகிக்க உள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) பங்கேற்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பிஆர்எஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், எதிர்கட்சிகளின் பாட்னா கூட்டத்தில் பங்கேற்கமாட்டார். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே சமமான இடைவெளியை எங்களது கட்சி பின்பற்றும். எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைவதால், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் எங்களது கட்சியை விரிவுபடுத்துவதற்கு தடையாக இருக்கும்.

இந்த ஆண்டு டிசம்பரில் தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், காங்கிரஸ் – பாஜகவை சமமான எதிர்கட்சியாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த சூழலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்ற பெயரில் காங்கிரசுடன் இணைந்து பயணிப்பது விவேகமானதாக இருக்காது’ என்றனர். பிஆர்எஸ் கட்சி பாட்னா கூட்டத்தை புறக்கணித்த நிலையில், எதிர்கட்சிகளின் வரிசையில் உள்ள பிஜூ ஜனதா தளமும் புறக்கணித்துள்ளது. மேலும் காங்கிரசுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் மோதல்கள் அதிகரித்துள்ளதால், பாட்னா கூட்டத்தில் திரிணாமுல் பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் மோதல்கள் இருப்பதால் ஆம்ஆத்மியும் பாட்னா கூட்டத்தில் பங்கேற்குமா? என்பது கேள்வியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post பாட்னாவில் 23ம் தேதி நடக்கும் எதிர்கட்சிகள் கூட்டத்தை பிஆர்எஸ் புறக்கணிப்பு? appeared first on Dinakaran.

Related Stories: