இம்ரான்கான் கட்சியை தடை செய்ய அரசு திட்டம் : உண்மையான காரணத்தை கூறினால் அரசியலை விட்டே விலகத் தயார் : இம்ரான் சவால்!!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியை தடை செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிதி முறைகேடு வழக்கில் சிக்கிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கடந்த 9ம் தேதி திடீரென துணை ராணுவ ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து இம்ரான் கட்சியின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகமும் உட்பட 10க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகள் தாக்கப்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.

ராணுவ தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அந்நாட்டு அரசு கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. தனது தொண்டர்களை இம்ரான் கான் கண்டிக்கவில்லை என்பதால் அவரது கட்சியை தடை செய்ய அரசு திட்டமிட்டு இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியிருந்தார். இது குறித்து பேசிய இம்ரான் கான், தம் மீதான நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்துவிட்டால் தாம் அரசியலை விட்டே விலகத் தயார் என்று கூறியுள்ளார். மேலும் இம்ரான் கான் கூறியதாவது, “நான் ஒரு குழுவை அமைக்கிறேன்.இரண்டு விஷயங்களைக் கூறுகிறேன். ஒருவேளை அந்த குழுவோடு இந்த அரசு சமரசம் ஆகிவிட்டால் அதாவது இம்ரான் இல்லாமல் சிறப்பான பாகிஸ்தான் அமையும் என்று அவர்கள் நிரூபித்தால் நாட்டின் நலன் கருதி நான் வெளியே நின்று கொள்கிறேன்.நான் இல்லாமல் இந்த நாடு சிறப்பாக செல்லும் என்று எனது குழுவிடம் தெளிவுபடுத்தினால் அரசியலை விட்டே விலக தயார்,’என்றார்.

The post இம்ரான்கான் கட்சியை தடை செய்ய அரசு திட்டம் : உண்மையான காரணத்தை கூறினால் அரசியலை விட்டே விலகத் தயார் : இம்ரான் சவால்!! appeared first on Dinakaran.

Related Stories: