நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டம்: நாளை பொதுக்குழு கூட்டத்தில் பட்டியல் ஒப்படைப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களை நாளை நடக்கும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இறுதி செய்ய திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் முன்கூட்டியே தொடங்கிவிட்டன. தமிழகத்தில் பல கட்சிகள் தற்போதே தேர்தல் வியூகங்களை வகுத்து அதற்கேற்ப தங்களின் யுத்திகளை பயன்படுத்தி வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் நாளை நடைபெற உள்ளன. சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் காலை 10.35 மணிக்கு இக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதற்கான அழைப்பிதழ் ஏற்கனவே, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி பல்வேறு முடிவுகளும், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நடைபெற்று வந்த பனிப்போரில் நீதிமன்றங்கள் மூலமாக தன்னுடைய பலத்தை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து காட்டி அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற பதவியை அடைந்தார். மேலும், தமிழகத்தில் தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவு கரங்களை நீட்டி வந்த அதிமுக தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி கூட்டணியில் முறிவு ஏற்பட்டுவிட்டதாக நேரடியாகவே பொதுவெளியில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுபோல பல்வேறு அரசியல் சதுரங்க ஆட்டங்களுக்கிடையே நாளை நடைபெற உள்ள பொதுக்குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான தீர்க்கமான முடிவில் எடப்பாடி பழனிசாமி இருப்பதால், ஏற்கனவே, தேர்தலில் நின்று வென்ற நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரை நிற்க வைக்க நினைத்தால் அவர்கள் பதுங்கி ஓடி ஒளிந்து வருகின்றனர். இதன் காரணமாக அப்செட்டான எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்ட செயலாளரிடமும் அசைன்மென்ட் கொடுத்திருந்தார்.

அதன்படி, ஒவ்வொரு தொகுதியிலும், தொழிலதிபர்கள், டாக்டர்கள், விவிஐபிக்கள், செல்வந்தர்களை தேர்தலில் நிற்க வைக்க சம்மதம் வாங்கி சீட் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவர்கள் தான் பூத் கமிட்டி அமைப்பதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், மீதமுள்ள தேர்தல் செலவுகளை கட்சி தலைமையிடத்தில் இருந்து கொடுக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார். அதன்படி, இந்த ஸ்பெசல் அசைன்மென்ட்டை முடிக்க மாவட்ட செயலாளர்கள் திணறியதாக தகவல்கள் வெளியாகின. ஏனெனில் சொந்த கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளே தேர்தலில் போட்டியிட தயங்கும் நிலையில் புதிய நபர்களை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என அக்கட்சியின் வட்டாரங்களில் பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன.

இருப்பினும், இதற்கான பட்டியலை நாளை மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கின்றனர். இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நாளை எடப்பாடி பழனிசாமி இறுதி செய்ய உள்ளார். மேலும், தேர்தலில் தோல்வியடையும் நபர்களுக்கு ஆஃபர் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடையும் தொழிலதிபர்கள், டாக்டர்கள், விவிஐபிக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக வரக்கூடிய 2026ம் ஆண்டிற்கான சட்டபேரவை தேர்தலில் மீண்டும் சீட் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேபோல், பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என அறிவித்திருந்தாலும் மறைமுக பேச்சுவார்த்தைகள் இருந்து வந்தன. தற்போது சிறுபான்மையினரிடையே அதிமுகவின் செல்வாக்கு கணிசமாக உயர்வதை கண்காணித்த எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி என்பது இல்லை என்ற முடிவுக்கே வந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இருப்பினும், தங்களுடன் கூட்டணி வைக்காவிட்டால் அதிமுக தலைவர் மீதான ஊழல் வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி பாஜ தலைமை முடிவெடுக்கும் என தமிழக பாஜக தரப்பில் மறைமுக மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, நாளை நடைபெறும் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் வேட்பாளர் இறுதி பட்டியல் குறித்தும், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது குறித்தும் முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டம்: நாளை பொதுக்குழு கூட்டத்தில் பட்டியல் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: