நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இன்னும் முடிவு எடுக்கவில்லை: கமல்ஹாசன் பேட்டி

கோவை: நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மற்றும் சேலம் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் நிருபர்களிடம் கமல்ஹாசன் கூறுகையில், ‘‘நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. விரைவில் முடிவு எடுக்கப்படும். கர்நாடக தேர்தலுக்காக பெங்களூரு பிரசாரத்திற்கு செல்வது குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும். கோவையில் நடந்த கூட்டம் நாங்கள் பேசுவதற்காக நடத்தப்பட்ட கூட்டம். எனவே என்ன பேசினோம் என்பது ரகசியம்’’ என்றார்.

* அரசியல் சாசனத்தை காப்பாற்ற முயற்சி

கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும்போது, ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது என்கிறார்கள். ஜனநாயகம் ஒரு பிள்ளை வளர்ப்பதுபோல பார்த்துக் கொள்ள வேண்டும். குறுக்கு வழி கண்டுபிடிக்கவே பலரும் முயற்சி செய்கிறார்கள். மக்களை மிரட்டி வாழும் பிரிட்டிஷ் அரசாக இருந்தாலும், எந்த அரசாக இருந்தாலும் என்னை மாதிரி ஆட்கள் பயப்படமாட்டார்கள். இறையான்மைக்கு ஆபத்து என்று யார் அழைத்தாலும் செல்வேன். எனக்கு இறை நம்பிக்கை இல்லை என்றாலும், நீங்கள் சாமி கும்பிடும் உரிமையை பறித்தால் குரல் கொடுப்பேன். அரசியல் சாசனத்திற்கு ஆபத்து வந்தால் அதனை காப்பாற்ற கட்சி பேதங்களை கடந்து அனைத்து முயற்சிகளையும் நாம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இன்னும் முடிவு எடுக்கவில்லை: கமல்ஹாசன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: