பரமக்குடி அருகே செங்கல் சூளையில் சவுடுமண் பதுக்கல்: உரிமையாளருக்கு போலீசார் வலை

பரமக்குடி: பரமக்குடி அருகே, செங்கல் சூளையில் ஆயிரம் யூனிட் சவுடுமண்ணை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக, சூளை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பொட்டிதட்டி, மஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு செங்கல் தயாரிக்க சவுடுமண் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசின் அனுமதி பெற்று சவடுமண்ணை அள்ளி வருகின்றனர். இந்நிலையில், அரசு அனுமதி பெற்று மண் அள்ளுவோரில் சிலர், அதிகமாக சவுடுமண்ணை அள்ளி வெளியில் விற்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், பரமக்குடி அருகே பொட்டிதட்டி கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் அளவுக்கு அதிகமாக சவுடு மண் குவித்து வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து உரப்புளி விஏஓ சதீஷ்குமார் கொடுத்த தகவலின்பேரில், அதிகாரிகள் சூளைக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், சூளை உரிமையாளர் மோகன்தாஸ், அவரது சொந்த நிலத்தில் உரிய அனுமதியின்றி 1,000 யூனிட் சவுடுமண் அள்ளி வந்து பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து விஏஓ கொடுத்த புகாரின் பேரில், பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மோகன்தாஸை தேடி வருகின்றனர்.

The post பரமக்குடி அருகே செங்கல் சூளையில் சவுடுமண் பதுக்கல்: உரிமையாளருக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.

Related Stories: