கு.க செய்த பெண் மீண்டும் கர்ப்பம் 3வது குழந்தையின் 21 வயது வரை மாதம் ரூ.10,000 உதவித் தொகை: ரூ.3 லட்சம் இழப்பீடும் வழங்க உத்தரவு

மதுரை: குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பமானதால், பிறந்த 3வது குழந்தைக்கு 21 வயது ஆகும் வரை மாதம் ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.3 லட்சம் இழப்பீடும் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த வாசுகி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எனக்கு 19.7.2013ல் 2வது குழந்தை பிறந்தது. 23.7.2013ல் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டேன். ஆனால், 2014 மார்ச்சில் மீண்டும் கர்ப்பமானேன். 6.1.2015ல் 3வது குழந்தை பிறந்தது. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்ைசையை மருத்துவர்கள் முறையாக செய்யாததால் தான் எனக்கு 3வது குழந்ைத பிறந்தது. என் கணவர் கூலித்தொழிலாளியாக உள்ளார். போதிய வருமானம் இல்லை. எனவே, ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, ‘‘குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்பது நாடு முழுமைக்குமான திட்டமாக இருந்தாலும் அதை செயல்படுத்துவது அரசு மற்றும் மருத்துவர்களின் கைகளில் தான் உள்ளது. இதை முறையாக செய்யாமல் போனால் திட்டத்தின் நோக்கம் வீணாகும். முறையற்ற காரணங்களால் மனுதாரர் 3வது குழந்தையை பெற்றுள்ளார். எனவே, மனுதாரரின் பொருளாதார மற்றும் சமுதாய பின்புலத்தை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். 3வதாக பிறந்த குழந்தைக்கு அரசு அல்லது தனியார் பள்ளியில் இலவசமாக கல்வி வழங்க வேண்டும். ஏற்கனவே கல்வி கட்டணம் செலுத்தியிருந்தால் அவரது கல்வித் தேவைக்காக திருப்பி வழங்க வேண்டும். 3வதாக பிறந்த குழந்தை 21 வயது அடையும் வரை அரசுத் தரப்பில் மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.

The post கு.க செய்த பெண் மீண்டும் கர்ப்பம் 3வது குழந்தையின் 21 வயது வரை மாதம் ரூ.10,000 உதவித் தொகை: ரூ.3 லட்சம் இழப்பீடும் வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: