ஒரே நாடு, ஒரே தேர்தல் ராம்நாத் கோவிந்த் குழுவுடன் சட்ட ஆணைய உறுப்பினர்கள் சந்திப்பு

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஆய்வு குழுவிடம் சட்ட ஆணைய உறுப்பினர்கள் நேற்று சந்தித்து தனது பரிந்துரையை அளித்தனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தின்நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகள், உள்ளாட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்த ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. நாடு முழுவதும் அனைத்து தேர்தல்களையும் நடத்துவது சாத்தியமில்லை என்பதால், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதையடுத்து ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை ஒன்றிய அரசு கடந்த 2ம் தேதி அமைத்தது.
இந்த குழுவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குலாம் நபி ஆசாத், 15வது நிதி ஆணையத் தலைவர் என்.கே.சிங், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, ஊழல் கண்காணிப்பு குழுவின் முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி மற்றும் மக்களவை பொதுசெயலாளர் சுபாஷ் காஷ்யப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார்.

சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு அழைப்பாளராக குழுவில் இடம்பெற்றுள்ளார். இந்த குழு விரைவில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த செப்டம்பர் 23ம் தேதி டெல்லியில் உள்ள ஜோத்பூர் விடுதியில் நடைபெற்றது. அதில் தேசிய, மாநில கட்சிகள், மாநில அரசில் இடம்பெற்றுள்ள கட்சிகள், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற கட்சிகள் தங்கள் ஆலோசனைகளை வழங்க அவைகளின் பிரதிநிதிகளை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதனிடையே நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான சட்ட ஆணையம் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான திட்டம் குறித்த அறிக்கையை இம்மாத தொடக்கத்தில் இறுதி செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஆய்வு குழுவின் 2வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையில் சட்ட ஆணைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வழி குறித்து விரிவான விளக்கத்தை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி அளித்தார். இதற்காக அரசியல் சட்டத்தில் தேவையான மாற்றங்கள் குறித்து சட்டக் குழு நீண்ட நேரம் விவாதித்தது. அதே சமயம் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து சட்டக் குழு தனது அறிக்கையை அரசிடம் இன்னும் சமர்ப்பிக்கவில்லை.

எனவே சட்ட ஆணையத்துடன் மீண்டும் உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்த உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் அடுத்த மூன்று மாதங்களில் தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக அனுப்ப வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2029ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன், மாநில சட்டசபை தேர்தல்களை நடத்துவதற்கு வசதியாக தற்போது உள்ள மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலத்தை நீட்டிப்பது அல்லது குறைப்பது மூலம் அனைத்து சட்டமன்றத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்துவதற்கான ஆலோசனையில் சட்ட ஆணையம் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செய்யும் போது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் 2029 வரை நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.

* உயர்மட்டக் குழு பெயர் மாற்றம்
நாட்டில் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு உயர்மட்டக் குழுவின் பெயர் மாற்றப்பட்டது. அந்த குழு இனிமேல் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் உயர்மட்டக் குழு’ என்று அழைக்கப்படும். மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக www.onoe.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் அதில் பதிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல் ராம்நாத் கோவிந்த் குழுவுடன் சட்ட ஆணைய உறுப்பினர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: