காந்தி நினைவிடம், அனுமன் கோயிலில் பிரார்த்தனை; டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் சரண்: சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி தெரிவித்தார்

புதுடெல்லி: டெல்லி திகார் சிறையில் சரணடைவதற்கு முன்பாக இன்று ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடம், அனுமன் கோயிலில் கெஜ்ரிவால் பிரார்த்தனை செய்தார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம்ஆத்மி கட்சி தலைவரான டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. கடைசி கட்ட தேர்தல் முடிந்த மறுநாள் (இன்று), திகார் சிறையில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தனது உடல் எடை மிகவும் குறைந்து விட்டதாகவும், இதற்காக மருத்துவ பரிசோதனைகள் செய்ய இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத் துறை சார்பில் வாதிடும் போது, ‘அவரது உடல் எடை தற்போது 1 கிலோ கூடியுள்ளது. இடைக்கால ஜாமீன் காலத்தில் உடல் பரிசோதனை செய்வதற்கு பதிலாக அவரது நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனால் அவரது இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கூடாது. விசாரணை நீதிமன்றத்தில் அவர் வழக்கமான ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம்’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கெஜ்ரிவால் மனு மீதான விசாரணை வரும் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராவது உறுதியானது. இந்நிலையில் கெஜ்ரிவால் வௌியிட்ட பதிவில், ‘உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கடந்த 21 நாட்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன். அதற்காக சிறையில் இருந்து வெளியே வந்தேன். உச்ச நீதிமன்றத்திற்கு மிக்க நன்றி’ என்று அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் திகார் சிறையில் கெஜ்ரிவால் ஆஜராகும் முன்பாக ெடல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடம் மற்றும் கன்னாட் பிளேஸில் உள்ள அனுமன் கோயிலுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார். அதன்பின் அவர் மாலை 3 மணியளவில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் திகார் சிறை அதிகாரிகள் முன் சரணடைந்தார். நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், கெஜ்ரிவால் மீண்டும் சிறையில் சரணடைவது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post காந்தி நினைவிடம், அனுமன் கோயிலில் பிரார்த்தனை; டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் சரண்: சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி தெரிவித்தார் appeared first on Dinakaran.

Related Stories: