ஓடைக்காடு அரசு நடுநிலைப் பள்ளியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊட்டி : சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் அனைவரும் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என ஓடைக்காடு பள்ளியில் நடந்த எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. ஊட்டி ஊராட்சி ஒன்றியம், தொட்டபெட்டா ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி தலைமை வகித்து பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அனைத்து குழந்தைகளின் ஆரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் உறுதி செய்யும் வகையில், ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நம் வீடுகளை சுத்தமாக வைத்திருப்பது போல பள்ளிகளை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இதனை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். நீலகிரி மாவட்டம் ‘நெகிழி இல்லாத மாவட்டமாக திகழ்கிறது”. நம் தேவைக்கேற்ற பொருட்களை மட்டும் வாங்கி கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் அனைவரும் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். மேலும், இங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி தலைமையாசிரியர் ஆகியோர் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து ஊராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சென்று சேர்வதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும், என்றார். முன்னதாக பள்ளித் தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். மேலும் ஆசிரியர்களிடத்தில் ‘எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கற்றல் நிலைக்கு ஏற்ப மாணவர்கள் திறமையை வெளிப்படுத்துகிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ‘அரும்பு\”, ‘மொட்டு\”, ‘மலர்\” ஆகிய ஒவ்வொரு வகுப்பிற்கும் ஏற்ற அறிவுறுத்தல்களை குழந்தைகள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் கோமதி, பள்ளி தலைமையாசிரியர் ஷோபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஓடைக்காடு அரசு நடுநிலைப் பள்ளியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: