வடமாநிலங்களில் நீடிக்கும் கனமழை: டெல்லி, அசாமை தொடர்ந்து குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லி: டெல்லி, அசாம் இமாச்சல பிரதேசத்தை தொடர்ந்து குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

தோராஜி பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதே போல் ராஜ்கோட்டில் கொடிய கனமழையால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஒரு சில மணி நேரங்களில் சுமார் 30 செ.மீ அளவிற்கு கனமழை கொட்டியதால் நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

அசாம் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நீடிக்கும் மழையால் விலை நிலங்கள், குடி இருப்புகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ஆறுகளில் கரை புரண்டு ஓடும் வெள்ளம் ஊருக்குள் புகுந்து இயல்பு வாழ்கை முற்றிலும் முடங்கியுள்ளது. அசாமில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 16 மாவட்டங்களில் சுமார் 90,000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில் தண்டவாளங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும் பாறைகள் குவிந்து கிடைப்பதாலும் கல்கா-சிம்லா இடையேயான ரயில் போக்குவரத்து ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கின் தீவிரம் குறைந்திருந்த போதிலும் அபாய அளவில் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே மராட்டிய மாநிலம் பால்கர், ராய்கட் பகுதிகளுக்கு இன்று மிக கனமழைகான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் தானே, மும்பை, ரத்தினகிரி ஆகிய இடங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், குஜராத், தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post வடமாநிலங்களில் நீடிக்கும் கனமழை: டெல்லி, அசாமை தொடர்ந்து குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: