மும்மொழி கொள்கைக்கு வாய்ப்பே இல்லை தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே தொடரும்: அரசு திட்டவட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்றும், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பகல் கனவு காண்பதுபோல மும்மொழிக்கொள்கை உருவாக வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை ஊட்டுவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொண்டது. அதன்படி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிப்பதற்காக மைக்ரோசாஃப்ட் TEALS திட்டம் என்னும் ஒரு திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாகக் கொண்டு வந்திருக்கிறது. இது குறித்து பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில் இது தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட திட்டம் என்று தெரிவித்திருந்தார். மேலும் வெகு விரைவில் மும்மொழிக் கொள்கையையும் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். வரலாற்றை மாற்றவோ திரிக்கவோ முயலக்கூடாது. தமிழ்நாடு அரசு அவரது கூற்றை முற்றிலும் நிராகரிக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டுக்கென்று வரலாறும் பாரம்பரியமும் உண்டு. வருங்காலத்தில் ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் ஒரு தகவல் தொடர்பு கருவி இருக்கும் என்று இன்றைய செல்போன் குறித்து அன்றே கணித்து சொன்னவர் பெரியார். இதன் தொடர்ச்சியாக 1997 லேயே அன்றைய முதல்வர் கலைஞர் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து தமிழ்நாட்டுக்கென தனியே தகவல் தொழில்நுட்பத்துறைக்கான கொள்கை ஒன்றை உருவாக்கி, தனியாக ஒரு துறையை உருவாக்கி அதற்கென ஒரு அமைச்சரை நியமித்தார். தகவல் தொழில்நுட்பத் துறை பற்றி நாட்டின் பிற மாநிலங்கள் பெரிதும் விழிப்புணர்வு அடையாத காலகட்டத்திலேயே தொலைநோக்குப் பார்வையோடு கலைஞர் சிந்தித்து இதற்கான திட்டங்களைத் தீட்டினார்.

டைடல் பார்க் போன்ற கட்டமைப்புகளை மாநிலத்தில் உருவாக்கி உலக நிறுவனங்களின் முதலீட்டு மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டினார். இதன் மூலம் சென்னை ஒரு ஐ.டி ஹப் ஆக மாறியது. இன்றைக்கு பழைய மகாபலிபுரம் சாலை முழுவதும் காணப்படும் ஐ.டி நிறுவனங்கள் அனைத்திற்கும் அன்றே வித்திட்டது கலைஞர் உருவாக்கிய தனி கொள்கைதான். இந்த தொடர் ஓட்டத்தின் தொடர்ச்சியாக செயற்கை நுண்ணறிவுக்கென தனியே ஒரு கொள்கை தமிழ்நாட்டில் 2020ல் உருவாக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை என்கிற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இவையெல்லாம் நடந்தன. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. எனினும் அதில் மாநிலங்கள் அடைய வேண்டிய இலக்குகள் என்று சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை தமிழ்நாடு ஏற்கனவே அடைந்துவிட்டது. எடுத்துக்காட்டாக தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50% ஆக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. ஆனால் அகில இந்திய மேல்நிலைக் கல்வி ஆய்வறிக்கையின் படி தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 சதிவிகிதத்தை 2019-20 கல்வியாண்டிலேயே எட்டிவிட்டது. 2035க்குள் 50 சதவிகிதத்தை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது தேசிய கல்விக் கொள்கை. ஆனால் தமிழ்நாடு 100 சதவீதத்தையே 2035ல் எட்டிவிடும்.

தமிழ்நாடு அரசு செய்ததை, செய்துகொண்டிருப்பதை தேசிய கல்விக் கொள்கையில் இணைத்துவிட்டு தேசிய கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு செயல்படுகிறது என்று சொல்வது நகைப்புக்குரியது. குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்து தமிழ்நாட்டுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை. நாட்டின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு எப்பொழுதும் தொழில்நுட்பத் துறையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடி மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவர். முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன்றவற்றில் வருங்காலத்தில் மிகத் தீவிரமாக பயிற்சிகள் அளிக்கப்படும். ஏனெனில் செயற்கை நுண்ணறிவை கையிலெடுக்கும் மாநிலமே இன்னும் பத்தாண்டுகளில் முன்னணி மாநிலமாக இருக்கப்போகிறது. பெரியார் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு முற்போக்குப் பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பகல் கனவு காண்பது போல மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக வாய்ப்பு இல்லை, இருமொழிக் கொள்கையே தொடரும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post மும்மொழி கொள்கைக்கு வாய்ப்பே இல்லை தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே தொடரும்: அரசு திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: