நீலகிரியில் 3ம் நாளாக காற்றுடன் சாரல் மழை

*மிதி படகு சவாரி நிறுத்தம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக காற்றுடன் கூடிய சாரல் மழை நீடிக்கிறது.ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவம் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழையின் போது காற்றுடன் கூடிய சாரல் மழை எந்நேரமும் பெய்து கொண்டிருக்கும். சில சமயங்களில் கனமழையும் பெய்யும்.

இது போன்ற சமயங்களில் மரங்கள் விழுவது, பெரிய அளவிலான மண்சரிவுகள் ஏற்படுவது போன்ற பேரிடர்கள் ஏற்படும். இதனால், போக்குவரத்து பாதிப்பு மட்டுமின்றி சில சமயங்களில் உயிர் சேதமும் ஏற்படும். இந்நிலையில், இம்முறை கடந்த மாதம் துவங்கிய தென்மேற்கு பருவ மழை இதுவரை தீவிரமடையாமல் உள்ளது. இதற்கிடையில், நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. நிவாரண பணிகளை மேற்கொள்ள அனைத்து துறைகளையும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டது.

மேலும், நிவாரண பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை மழை தீவிரமடையவில்லை. ஆனால், கடந்த மூன்று தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. ஊட்டி, குந்தா போன்ற பகுதிகளில் காற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்படுகிறது.

குந்தா சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய சாரல் மழை எந்நேரமும் காணப்படுகிறது. காற்றும் மற்றம் மழையின் காரணமாக குளிரின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. நேற்று படகு இல்லம் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால், சில மணி நேரம் மிதி படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. காற்றின் வேகம் குறைந்தவுடன் மீண்டும் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டது.

The post நீலகிரியில் 3ம் நாளாக காற்றுடன் சாரல் மழை appeared first on Dinakaran.

Related Stories: