திருவனந்தபுரம்: கேரளாவில் ஓட்டலில் இருந்து வாங்கிய புரோட்டா பார்சலில் பாம்பு தோல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம், காசர்கோடு அருகே சில நாட்களுக்கு முன் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட தேவநந்தா என்ற பிளஸ் 1 மாணவி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஓட்டலின் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருவனந்தபுரம் அருகே ஒரு ஓட்டலில் பரோட்டா பார்சலில் பாம்பு தோல் கண்டுபிடிக்கப்பட்டது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு மார்க்கெட் சந்திப்பில் அசைவ ஓட்டல் உள்ளது. நேற்று முன்தினம் மாலை இப்பகுதியை சேர்ந்த பிரியா என்பவர் அந்த ஓட்டலில் பரோட்டா பார்சல் வாங்கி வீட்டுக்கு கொண்டு சென்றார். அவரது மகள் அதை சாப்பிட தயாரானார். பிரியா அந்த பார்சலை வாங்கி பார்த்தபோது அதில் பாம்பு தோல் இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், நெடுமங்காடு போலீசுக்கும், நகரசபை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள் அந்த ஓட்டலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அதற்கு சீல் வைத்தனர்.