திருவனந்தபுரம்: பக்தர்களின் சரண கோஷத்திற்கிடையே சபரிமலை பொன்னம்பலமேட்டில் நேற்று மாலை மூன்று முறை மகரஜோதி தெரிந்தது. சபரிமலையில் 41 நாள் நீண்ட மண்டல காலம் கடந்த டிசம்பர் 27ம் தேதி நடைபெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. அன்று இரவு நடை சாத்தப்பட்டு 2 நாட்களுக்குப் பின்னர் மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் சிகர நிகழ்வான மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் தொடங்கின.
மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின்னர் 2.45 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 3.08 மணியளவில் மகரசங்கிரம பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் திருவிதாங்கூர் மன்னர் அரண்மனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நெய்யை பயன்படுத்தி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று மாலை 6.25 மணியளவில் திருவாபரண ஊர்வலம் சன்னிதானத்தை அடைந்தது.
18ம்படி வழியாக கொண்டு செல்லப்பட்ட திருவாபரண பேடகத்தை தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் வாங்கி கோயிலுக்குள் கொண்டு சென்றனர். இதன்பிறகு நடை சாத்தப்பட்டது. ஐயப்ப விக்ரகத்தில் திருவாபரணம் அணிவிக்கப்பட்ட பிறகு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 6.40 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 6.42 மணியளவில் பொன்னம்பலமேட்டில் அடுத்தடுத்து மூன்று முறை மகரஜோதி தெரிந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர்.
சபரிமலையை சுற்றிலும் பல்வேறு பகுதிகளில் கடந்த பல நாட்களாக குடில் அமைத்து தங்கியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகரஜோதியை பக்திப் பரவசத்துடன் தரிசித்தனர். இந்த மகிழ்ச்சியுடன் பக்தர்கள் அனைவரும் தங்களது ஊர்களுக்கு திரும்பினர். இரவு 11 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது. வரும் 19ம் தேதி இரவு வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 18ம் தேதியுடன் மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடையும். வரும் 20ம் தேதி காலை 6.30 மணியளவில் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்று பக்தர்கள் யாருக்கும் தரிசனம் கிடையாது. அன்றுடன் இவ்வருட மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும்.
* 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்
மகரவிளக்கு பூஜை தினமான நேற்று தரிசனத்திற்கு 35 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் மகரஜோதியை தரிசிப்பதற்காக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல நாட்களுக்கு முன்பே சபரிமலையில் வந்து குடில் அமைத்து தங்கியிருந்தனர். சபரிமலை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும், புல்மேடு, பஞ்சிப்பாறை, நெல்லிமலை, இலவுங்கல், அட்டத்தோடு, தலைப்பாறை உள்பட பகுதிகளிலும் மகரஜோதியை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். நேற்று இந்தப் பகுதிகளில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டு ஐயப்பனின் ஜோதி வடிவை தரிசித்தனர்.
