புதுடெல்லி: உலகின் வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா 80வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. உலக அளவில் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு மூலம் உலக நாடுகளின் பாஸ்போர்ட் பட்டியலை தரவரிசைப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 85வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5 இடங்கள் முன்னேறி 80வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் 55 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
227 நாடுகளில் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் வசதியுடன் சிங்கப்பூர் பாஸ்போர்ட் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஜப்பான் மற்றும் தென் கொரியா 188 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லும் வசதியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.
டென்மார்க், லக்சம்பர்க், ஸ்பெயின், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் 186 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் வசதியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளன. நான்காவது இடத்தில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நோர்வே ஆகியவை உள்ளன. இந்த நாட்டு பாஸ்போர்ட் வைத்து இருந்தால் 185 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும். அதே போல் ஹங்கேரி, போர்ச்சுகல், ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் வைத்து இருந்தால் 184 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் என்று பட்டியல் தெரிவித்துள்ளது.
6வது இடத்தில் குரோஷியா, செக்கியா, எஸ்டோனியா, மால்டா, நியூசிலாந்து, போலந்து நாடுகளும், 7வது இடத்தில் ஆஸ்திரேலியா, லாட்வியா, லீக்டன்ஸ்டைன், பிரிட்டன் நாடுகளும், 8வது இடத்தில் கனடா, ஐஸ்லாந்து, லிதுவேனியா நாடுகளும், 9வது இடத்தில் மலேசியாவும், 10வது இடத்தில் அமெரிக்காவும் உள்ளன.
